ஆண்டுதோறும் விழாக்காலங்களில் விலங்குகளை வைத்து போட்டிகளில் நடத்தப்படுவது வழக்கம். தற்போதுகூட தமிழகத்தில் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு, ஜல்லிக்கட்டுப் போட்டிகள் நடைபெற்று வருகின்றன. இந்தநிலையில் பஞ்சாப் மாநிலம் பதிண்டா நகரத்தில் உள்ள பல்லுவானா என்ற கிராமத்தில் சேவல் சண்டைக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. இந்தத் தகவல் போலீசாருக்குக் கிடைத்தவுடன் அங்கு விரைந்து சென்றுள்ளனர். காரணம், சில விலங்குகள் மற்றும் பறவைகள் போட்டிகளுக்கு அரசு தடை விதித்துள்ளது. அதிலும் இந்தப் போட்டியில் பங்கேற்ற சேவல் துன்புறுத்தப்பட்டதாக போலீசாருக்கு தகவல் கிடைத்ததைத் தொடர்ந்து அதிரடி நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது.
அதன்படி, உடனடியாக சம்பவ இடத்துக்குச் சென்ற போலீசாரைக் கண்டதும் போட்டியை நடத்தியவர்களும், கலந்துகொண்டவர்களும் அங்கிருந்து தப்பியோடினர். ஆனால் போலீசார் அவர்களை விரட்டிப் பிடித்ததில் ஒரு நபர் பிடிபட்டார். மேலும் இரண்டு சேவல்கள் பிடிபட்டன. இதனைத் தொடர்ந்து சண்டையில் காயமடைந்த சேவலுக்கு மருத்துவச் சிகிச்சை அளிக்கப்பட்டது. மேலும் உணவு வழங்கப்பட்டு அதற்கு பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளது.
இந்த சம்பவம் தொடர்பாக 3 பேர் மீது விலங்கு வதை சட்டத்தின்கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. போலீசாரால் பிடிபட்ட ராஜ்விந்தர் என்பவர் தற்போது ஜாமீனில் வெளிவந்துள்ளார். தலைமறைவாக உள்ள ஜாக்சிர் சிங் மற்றும் குர்ஜித் சிங் ஆகியோரைப் போலீசார் தேடி வருகின்றனர். மேலும் அந்த இடத்தில் இருந்த 11 கோப்பைகளையும் போலீசார் மீட்டுள்ளனர். இந்த வழக்கில் போலீசார் பாதுகாப்பில் வைக்கப்பட்டுள்ள சேவல், குற்றம்சாட்டப்பட்டவர்களுக்கு எதிராக நீதிமன்றத்தில் ஆதாரமாக சமர்ப்பிக்கப்படும் என தகவல் வெளியாகியுள்ளது.
தற்போது இந்த சேவலை போலீசார் தங்கள் காவல் நிலையத்தில் உள்ள ஒருவரிடம் விட்டுச் சென்றுள்ளனர். போலீஸ் ஸ்டேஷனில் வைத்தால் தனிமையாகிவிடும் என்பதால், சேவலை பராமரிக்கும் பொறுப்பு ஒருவருக்கு வழங்கப்பட்டுள்ளது. எனினும், சேவலுக்கு எந்த பாதிப்பும் ஏற்படாத வகையில், நேரில் சென்று பார்வையிட்டு அதன் சிகிச்சை பற்றி விசாரித்து வருவதாகவும் போலீசார் தெரிவித்துள்ளனர். போலீஸ் காவலில் கோழிகள் வளர்க்கப்படுவதை போலீஸ் விசாரணை அதிகாரி நிர்மல்ஜித் சிங் உறுதிப்படுத்தியுள்ளார். சேவலுக்கு போலீஸ் பாதுகாப்பு அளிக்கும் வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.