“உணவில் விஷம் வைத்து கொல்ல சதி ?” - சோட்டா ராஜனும்.. திகார் ஸ்கெட்ச்சும்..

“உணவில் விஷம் வைத்து கொல்ல சதி ?” - சோட்டா ராஜனும்.. திகார் ஸ்கெட்ச்சும்..
“உணவில் விஷம் வைத்து கொல்ல சதி ?” - சோட்டா ராஜனும்.. திகார் ஸ்கெட்ச்சும்..

பிரபல தாதா சோட்டா ராஜனை, அவரது முன்னாள் கூட்டாளியும், சர்வதேச தாதா தாவூத் இப்ராஹிமின் கூட்டாளியுமான சோட்டா ஷகீல் கொல்ல சதி திட்டம் தீட்டியிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

சர்வதேச பயங்கரவாத கும்பல் என்று அறியப்படும் டி-கம்பெனி எனப்படும் தாவூத் கம்பெனியின் முன்னாள் கூட்டாளியாக இருந்த சோட்டா ராஜன் தற்போது, டெல்லி திகார் சிறையில் பலத்த பாதுகாப்புடன் அடைக்கப்பட்டுள்ளார். இவரை கொல்ல சதித்திட்டம் தீட்டப்பட்டிருப்பதாக வெளியான தகவலை அடுத்து அவருக்கு பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது. திகார் சிறையின் எண் 2-ல் இருக்கும் சோட்டா ராஜனை, உணவில் விஷம் வைத்துக்கொள்ள சதித்திட்டம் தீட்டப்படிருப்பதாக திகார் சிறை அதிகாரிகளுக்கு உளவுத்துறை மூலம் ரகசியத் தகவல் கிடைத்துள்ளது.

இந்த தகவலை அடுத்து சோட்டா ராஜனுக்கு உணவு சமைக்கும் நபர்களையும், உணவை கொண்டு சென்று கொடுக்கும் நபர்களையும் மூன்று முறை சிறை நிர்வாகம் மாற்றியிருப்பதாக கூறப்படுகிறது. அதுமட்டுமின்றி சோட்டா ராஜன் இருக்கும் சிறை அறை 24 மணி நேரமும் சிசிடிவி கேமராக்கள் மூலம் சிறைக் காவலர்களால் கண்காணிக்கப்பட்டுக் கொண்டிருக்கிறது. இதுதவிர தமிழகத்தைச் சேர்ந்த சிறப்பு காவலர்களும் சோட்டா ராஜனை கண்காணித்து வருகின்றனர். அவருக்கு சமைக்கப்படும் உணவுக்காக அனுப்பப்படும் சமையல் பொருட்கள் சோதனைக்களுக்குப் பின்னரே அனுமதிக்கப்படுகிறதாம். சோட்டா ராஜனை யாரும் சந்திக்கக் கூடாது என்பதில் சிறை நிர்வாகம் கண்டிப்புடன் இருக்கிறதாம். இதனால் அவரை 10 அடிக்கு அருகே யாரையும் நெருங்க விடுவதில்லை என்பதிலும், சிறை நிர்வாகம் கவனுத்துடன் இருக்கிறது.

சோட்டா ராஜனை கொல்ல சதித்திட்டம் தீட்டியது டி-கம்பெனியின் முக்கிய தாதாவில் ஒருவரான சோட்டா ஷகீல் தான் என உளவுத்துறை, திகார் சிறை நிர்வாகத்திடம் உறுதிப்படுத்தியதாக தெரிகிறது. பாகிஸ்தானின் கராச்சியில் பதுங்கியிருப்பதாக பல ஏஜென்ஸிகள் தெரிவிக்கும், தாவூத் இப்ராஹிமுடன் தற்போது ஷகீல் இருப்பதாக கூறப்படுகிறது. அங்கு இருவரும் சேர்ந்து எடுத்த முடிவின் படி, ராஜனை கொல்ல ஷகீல் முடிவெடுத்திருப்பதாகவும் அறியப்படுகிறது.

ராஜனை உணவில் விஷம் வைத்து கொல்லுமாறு அண்மையில் ஷகீல் யாருடனோ போனில் பேசியதை உளவுத்துறை கேட்டதாக கூறப்படுகிறது. இதன்பின்னரே சோட்டா ராஜனுக்கு பலத்த பாதுகாப்புகள் போடப்பட்டிருப்பதாகவும் தெரிகிறது. சோட்டா ராஜன் டி-கம்பெனி குறித்த தகவல்களையும், அவர்களின் போதைப்பொருள் கடத்தல் மற்றும் கள்ளநோட்டுகள் மோசடி தொடர்பாக இந்திய உளவுத்துறையிடம் கூறுவதால் இந்த முடிவை சோட்டா ஷகீல் எடுத்திருப்பதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

முன்னதாக, தாவூத் இப்ராஹிமுடன் டி-கம்பெனியில் இணைந்து பயங்கரவாத செயல்களில் ஈடுபட்ட வந்த சோட்டா ராஜன், 1993ஆம் ஆண்டு மும்பை குண்டு வெடிப்பிற்கு பின்னர் தனியாக பிரிந்தார். அதைத்தொடர்ந்து தலைமறைவாக இருந்த ராஜன், கடந்த 2015ஆம் ஆண்டு ஆஸ்திரேலிய போலீஸ் கொடுத்த தகவல்களின் அடிப்படையில், இந்தோனேஷியாவில் சர்வதேச போலீஸாரால் கைது செய்யப்பட்டார்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com