'நிழல் உலக தாதா' சோட்டா ராஜன் கொரோனாவால் உயிரிழப்பா? - எய்ம்ஸ் நிர்வாகம் மறுப்பு
எய்ம்ஸ் மருத்துவமனையில் கொரோனா சிகிச்சை பெறும் நிழல் உலக தாதா சோட்டா ராஜன் இறந்துவிட்டதாக பரவிய தகவலை மருத்துவமனை நிர்வாகம் மறுத்துள்ளது.
மும்பையில் நிழல் உலக தாதாவாக செயல்பட்டவர் சோட்டா ராஜன் (வயது 62). போலீசார் தேடியதால் தலைமறைவான அவர் கடந்த 2015-இல் இந்தோனேஷியாவில் கைது செய்யப்பட்டு இந்தியாவிற்கு நாடு கடத்தப்பட்டார்.
மும்பையில் 2011-ல் கொல்லப்பட்ட பத்திரிகையாளர் ஜோதிர்மாதேயின் வழக்கில் சோட்டா ராஜனுக்கு 2018-ல் மும்பை நீதிமன்றம் ஆயுள் தண்டனை வழங்கி தீர்ப்பளித்தது. இதையடுத்து டெல்லி திஹார் சிறையில் அடைக்கப்பட்ட அவருக்கு சமீபத்தில் கொரோனா பாதிப்பு கண்டறியப்பட்டது. இதைத் தொடர்ந்து சோட்டா ராஜன் எய்ம்ஸ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அவருக்கு இதய பாதிப்பு, நீரிழிவு உள்ளிட்ட பல்வேறு பிரச்னைகளாக இருப்பதாக கூறப்படுகிறது.
இதற்கிடையே, சோட்டா ராஜன் சிகிச்சைப் பலனின்றி உயிரிழந்து விட்டதாக தகவல் பரவியது. இந்நிலையில் அதை மறுத்துள்ள எய்ம்ஸ் மருத்துவமனை நிர்வாகம் மற்றும் டெல்லி போலீசார், சோட்டா ராஜனுக்கு சிகிச்சை தொடர்வதாகவும், அவர் உயிருடன் இருப்பதாகவும் தெரிவித்துள்ளனர்.