சத்தீஸ்கர் | ரூ.40 லட்சம் பரிசுத் தொகை அறிவிக்கப்பட்ட நக்சல் தலைவர் என்கவுன்டரில் சுட்டுக்கொலை!
இந்தியாவில் நக்சல் அமைப்பினர் தாக்கம் அதிகமுள்ள மாநிலங்களில் சத்தீஸ்கரும் ஒன்று. நக்சல் பாதிப்பு அதிமுள்ள மாவட்டங்களில் பாதுகாப்பு படையினர் தேடுதல் வேட்டை நடத்துவதும் இருதரப்புக்கும் இடையே துப்பாக்கிச் சூடு நடத்துவதும் அங்கு தொடர்கதையாகி வருகிறது.
இந்த நிலையில் அம்மாநிலத்தில், 30 ஆண்டுகளாக நக்சல் நடவடிக்கைகளில் தீவிரமாக ஈடுபட்ட மூத்த மாவோயிஸ்ட் தலைவர் இன்று பாதுகாப்புப் படையினரால் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளார். சத்தீஸ்கர் மாநிலம் பிஜாப்பூரில் உள்ள இந்திராவதி புலிகள் காப்பகத்தில் மூத்த நக்சல் போராளிகள் இருப்பதாக உளவுத்துறைக்குத் தகவல் கிடைத்தது. அதன்பேரில், மாவட்ட ரிசர்வ் காவல் படை (DRG) மற்றும் சிறப்புப் பணிப் படை (STF) ஆகியவற்றின் கூட்டுக் குழு, வனப்பகுதியில் ஒருங்கிணைந்த நடவடிக்கையைத் தொடங்கியது.
கூட்டுப் படைகளுக்கும் நக்சல்களுக்கும் இடையே இன்று அதிகாலை முதல் துப்பாக்கிச் சண்டை தொடர்ந்தது. இந்த தாக்குதலின்போது, மிகவும் தேடப்படும் நக்சல் தலைவர்களில் ஒருவரான மத்திய குழு உறுப்பினர் சுதாகர் சுட்டுக் கொல்லப்பட்டார். அவரது தலைக்கு ரூ.40 லட்சம் பரிசுத் தொகை அறிவிக்கப்பட்டிருந்தது.
சத்தீஸ்கரில் கடந்த மாதம் பாதுகாப்புப் படையினருடனான மோதலில் பசவராஜு என்றும் அழைக்கப்படும் நம்பலா கேசவ் ராவ் கொல்லப்பட்டதைத் தொடர்ந்து தற்போது சுதாகரின் மரணம் நிகழ்ந்துள்ளது.
கடந்த ஆறு மாதங்களில், நக்சல் தலைவர் பசவராஜு உட்பட மூன்று மத்திய குழு உறுப்பினர்களையும், சத்தீஸ்கர், ஜார்க்கண்ட் மற்றும் ஒடிசா முழுவதும் 150க்கும் மேற்பட்ட உயர்மட்ட நக்சல்களையும் பாதுகாப்புப் படையினர் கொன்றுள்ளனர். இந்தியாவில் மாவோயிஸ்ட் கிளர்ச்சியை ஒழிக்க மார்ச் 2026 வரை காலக்கெடுவை மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா நிர்ணயித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.