
சத்தீஸ்கர் மாநிலத்தில் பள்ளி ஒன்றில் தஞ்சமடைந்த பெண் தரதரவென இழுத்துச் செல்லப்பட்டு வெளியேற்றப்பட்ட கொடூரம் அரங்கேறியுள்ளது.
சத்தீஸ்கர் மாநிலத்தில் தொடர்ந்து மழை பெய்து வருவதால் ஏராளமான மக்கள் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ளனர். வீடுகளில் தண்ணீர் புகுந்ததால் மக்கள் இருக்க இடமின்றி சிரமத்திற்குள்ளாகியுள்ளனர். வெள்ளத்தால் பாதிக்கப்பட்டவர்கள் பள்ளிகளிலும், அரசுக் கட்டடங்களிலும் தஞ்சம் புகுந்துள்ளனர். இந்நிலையில் கொரியா மாவட்டம் பர்வானி கன்யா ஆஷ்ரம் என்ற இடத்தில் பெண் ஒருவர் தனது 3 மாதக் குழந்தையுடன் அரசுப்பள்ளி விடுதி ஒன்றில் தஞ்சமடைந்திருந்தார்.
அப்போது அந்தப் பள்ளியினுடைய மேற்பார்வையாளரின் கணவர் ரங்லால் சிங், அப்பெண்ணின் பொருட்களை தூக்கி வெளியே வீசியுள்ளார். அத்துடன் 3 மாத குழந்தையையும் இரக்கமின்றி தூக்கி வீசியுள்ளார். பின்னர், அந்தப் பெண்ணையும் வலுக்கட்டாயமாக கையைப் பிடித்து, தரையில் தரதரவென இழுத்துச் சென்று விடுதியைவிட்டு வெளியேற்றினார். இந்தச் சம்பவம் காண்போரை கலங்கச் செய்துள்ளது.