”கன்னித்தன்மை பரிசோதனை செய்ய பெண்ணை கட்டாயப்படுத்த முடியாது” சத்தீஸ்கர் உயர்நீதிமன்றம்!
தனது மனைவி வேறொரு ஆணுடன் திருமணத்துக்கு மீறிய உறவில் இருப்பதாகக் கூறி, அவரது கன்னித்தன்மை பரிசோதனை செய்யக் கோரி ஒருவர், சத்தீஸ்கர் உயர் நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்திருந்தார். இந்த மனு, நீதிபதி அரவிந்த் குமார் வர்மா அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது நீதிபதி, “மனுதாரர், தனது மனைவியை கன்னித்தன்மை பரிசோதனைக்கு உட்படுத்தவும், அவரது சாட்சியத்தில் உள்ள இடைவெளியை நிரப்பவும் அனுமதிக்க முடியாது. தனது மனைவிக்கு கன்னித்தன்மை பரிசோதனை நடத்த வேண்டும் என்று கோரிய மனுதாரரின் வாதம் அரசியலமைப்பிற்கு விரோதமானது. ஏனெனில் இது பெண்களின் கண்ணியத்திற்கான உரிமையை உள்ளடக்கிய அரசியலமைப்பின் 21வது பிரிவை மீறுவதாக உள்ளது. இந்திய அரசியலமைப்பின் 21வது பிரிவு வாழ்க்கை உரிமை மற்றும் தனிப்பட்ட சுதந்திரத்தை மட்டுமல்ல, பெண்களுக்கு மிகவும் அவசியமான கண்ணியத்துடன் வாழும் உரிமையையும் உறுதி செய்கிறது.
எந்தவொரு பெண்ணையும் தனது கன்னித்தன்மை பரிசோதனையை நடத்த கட்டாயப்படுத்த முடியாது. இது பிரிவு 21இன் கீழ் உத்தரவாதம் அளிக்கப்பட்ட அடிப்படை உரிமைகளை மீறுவதாகும். பிரிவு 21 'அடிப்படை உரிமைகளின் இதயம்' என்பதை மனதில் கொள்ள வேண்டும். கன்னித்தன்மை பரிசோதனை என்பது பெண்களை சரியான கண்ணியத்துடனும் நடத்துவதற்கான அடிப்படை உரிமையை மீறுவதாகும். பிரதிவாதியின் கன்னித்தன்மை பரிசோதனைக்கு அனுமதி வழங்குவது அவரது அடிப்படை உரிமைகள், இயற்கை நீதி மற்றும் ஒரு பெண்ணின் ரகசிய அடக்கம் ஆகியவற்றின் அடிப்படைக் கொள்கைகளுக்கு எதிரானது” என தெரிவித்து அந்த மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டார். அதேநேரத்தில், “ஆண்மைக்குறைவு குற்றச்சாட்டுகள் ஆதாரமற்றவை என்பதை மனுதாரர் நிரூபிக்க விரும்பினால், அவர் சம்பந்தப்பட்ட மருத்துவ பரிசோதனைக்கு உட்படுத்தலாம் அல்லது வேறு ஏதேனும் ஆதாரங்களை சமர்ப்பிக்கலாம்” என நீதிபதி தெரிவித்துள்ளார்.
முன்னதாக, ”தனது கணவர் ஆண்மைக்குறைவு உள்ளவர் என்றும், கணவருடன் திருமண உறவையோ அல்லது சேர்ந்து வாழவோ முடியாது” எனத் தெரிவித்த மனுதாரரின் மனைவி, அவரிடமிருந்து விவாகரத்து கோரியும் ஜீவனாம்சம் கோரியும் குடும்ப நீதிமன்றத்தில் இடைக்கால விண்ணப்பத்தை தாக்கல் செய்திருந்தார். ஆனால் அவருடைய கோரிக்கையை குடும்ப நீதிமன்றமும் நிராகரித்த நிலையில், தற்போது சத்தீஸ்கர் உயர்நீதிமன்றமும் நிராகரித்துள்ளது.