சத்தீஸ்கர் அரசு 'ரேபிட் டெஸ்ட் கிட்' கொள்முதல் செய்வதில் சிக்கல்
சத்தீஸ்கர் மாநிலத்தில் 'ரேபிட் டெஸ்ட் கிட்' டெண்டர் முறைகேடு தொடர்பாக மூன்று நிறுவனங்களுக்கு அம்மாநில அரசு தடைவிதித்துள்ளது.
கோர்பா மாவட்டத்தில் உள்ள கட்கோரா என்ற பகுதி சத்தீஸ்கரில் கொரோனாவால் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. ஹாட் ஸ்பாட்டாக அறிவிக்கப்பட்டுள்ள அந்தப் பகுதியில் 3000 பேருக்கு பரிசோதனை மேற்கொள்ள வேண்டிய சூழலில் 500 பேருக்கு மட்டுமே கொரோனா பரிசோதனை செய்யப்பட்டுள்ளதாக அம்மாநில மூத்த சுகாதாரத்துறை அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.
இந்நிலையில் சத்தீஸ்கர் அரசு ரேபிட் டெஸ்ட் கிட் கொள்முதல் செய்வதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. அம்மாநில அரசு இரண்டு முறை டெண்டர் அறிவிப்பு வெளியிட்டுள்ள நிலையில், இதுவரை ரேபிட் டெஸ்ட் கிட் கிடைக்கவில்லை. டெண்டர் மூலம் தேர்வு செய்யப்பட்ட மூன்று நிறுவனங்களில், இரண்டு நிறுவனங்கள் விண்ணப்பத்தை தவறாக பூர்த்தி செய்ததினாலும், ஒரு நிறுவனத்திடம் டெஸ்ட் கிட் போதிய அளவு இல்லாததினாலும் கொள்முதல் செய்யமுடியவில்லை.
இதனையடுத்து அந்த நிறுவனங்களுக்கு மூன்று ஆண்டுகள் தடை விதித்து சத்தீஸ்கர் அரசு உத்தரவிட்டுள்ளது. மற்ற மாநிலங்களை போல விரைவாக ரெபிட் டெஸ்ட் கிட்-களை கொள்முதல் செய்யவில்லை என்றும், தாங்கள் இன்னும் டெண்டர் அறிவிப்பு நிலையிலேயே இருப்பதாகவும் சத்தீஸ்கர் மாநில அரசு உயரதிகாரி தெரிவித்துள்ளார். மேலும் நிறுவனங்கள் குறைந்த விலைக்கு ஏலம் கேட்பதாலும், தேவையற்ற காரணங்கள் பல சொல்வதாலும் ரேபிட் டெஸ்ட் கிட் கொள்முதல் செய்வதில் தாமதம் ஏற்படுவதாக அம்மாநில அரசு தெரிவித்துள்ளது.