இயேசு கிறிஸ்து குறித்து சர்ச்சை கருத்து| சத்தீஸ்கர் பாஜக எம்எல்ஏவுக்கு நீதிமன்றம் சம்மன்!
சத்தீஸ்கர் மாநிலத்தில் பாஜக ஆட்சி நடைபெற்று வருகிறது. இந்த நிலையில் அம்மாநில பாஜக பெண் எம்எல்ஏ ஒருவருக்கு மாவட்ட நீதிமன்றம் சம்மன் அனுப்பியுள்ளது. கடந்த ஆண்டு செப்டம்பர் 1ஆம் தேதி, ஜாஷ்பூர் சட்டமன்றத் தொகுதியில் உள்ள தெக்னி கிராமத்தில் நடந்த நிகழ்ச்சியில் கலந்துகொண்டு பேசிய பாஜக எம்.எல்.ஏ. ரேமுனி பகத், ”இயேசு கிறிஸ்து இறந்த பிறகு உயிருடன் வர முடியும் என்றால், மதம் மாறியவர்களுக்கு கல்லறை ஏன் தேவை” எனச் சர்ச்சைக்குரிய வகையில் பேசினார்.
அவருடைய இந்த வீடியோ இணையத்தில் வைரலாகியுள்ளது. அவருடைய இந்த கருத்து இயேசு கிறிஸ்துவை அவமதிப்பதாக கூறி, கிறிஸ்தவ மதத்தை சேர்ந்தவர்கள் ஜாஷ்பூரில் உள்ள அனைத்து காவல் நிலையங்களிலும் எம்எல்ஏ மீது வழக்குப் பதிவு செய்யக் கோரி அவருக்கு எதிராக புகார் அளித்தனர். ஆனால் வழக்கை விசாரித்த போலீசார், அவர்மீது எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.
இதையடுத்து, அவர்கள் 120 கிலோமீட்டர் மனிதச் சங்கிலி அமைத்து போராட்டத்தில் ஈடுபட்டனர். தவிர, தெங்கினி கிராமத்தில் இருந்து முதல்வரின் இல்லமான பாக்யா வரை 120 கிலோமீட்டர்கள் மூன்று நாள் நடைப்பயணமும் மேற்கொண்டனர். இருந்தும் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை எனக் கூறப்படுகிறது. இதனையடுத்து இந்த விவகாரம் தொடர்பாக நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்யப்பட்டது.
சாட்சியங்களின் வாக்குமூலம் மற்றும் பாஜக எம்.எல்.ஏ. பேசிய வீடியோவை ஆராய்ந்த நீதிமன்றம், குற்றம்சாட்டப்பட்ட ராய்முனி பகத் சர்ச்சைக்குரிய வகையில் பேசியுள்ளதை உறுதிசெய்தது. மேலும், இரு குழுக்களுக்கு இடையே பகைமையை ஊக்குவித்தல் உள்ளிட்ட பல பிரிவுகளில் பாஜக எம்எல்ஏ.ரேமுனி பகத் மீது வழக்குப்பதிவு செய்வதற்கு போதுமான ஆதாரம் இருப்பதாக நீதிமன்றம் தெரிவித்தது. தொடர்ந்து, எம்எல்ஏ மீது கிரிமினல் வழக்கு பதிவு செய்ய வேண்டும் என்றும் இது தொடர்பாக வரும் 10ஆம் தேதி நேரில் ஆஜராகி விளக்கம் அளிக்க வேண்டும் என்று சத்தீஸ்கரின் ஜாஷ்பூர் மாவட்ட நீதிமன்றம் அவருக்கு சம்மன் அனுப்பியுள்ளது.