“ஈஸியா பணம் சம்பாதிக்கலாம்”- ஆசைகாட்டி கல்லூரி மாணவர்களை விஷமாக்கிய கஞ்சா கும்பல்

“ஈஸியா பணம் சம்பாதிக்கலாம்”- ஆசைகாட்டி கல்லூரி மாணவர்களை விஷமாக்கிய கஞ்சா கும்பல்
“ஈஸியா பணம் சம்பாதிக்கலாம்”- ஆசைகாட்டி கல்லூரி மாணவர்களை விஷமாக்கிய கஞ்சா கும்பல்

சென்னை கல்லூரி மாணவர்களை பயன்படுத்தி கஞ்சா விற்பனை செய்த கும்பலை போலீசார் திட்டமிட்டு பிடித்தனர்.

சென்னை விருகம்பாக்கம் பகுதியில் தனியார் தங்கும் விடுதியில் கல்லூரி மாணவர்கள் 18 கிலோ கஞ்சாவுடன் பிடிபட்டனர். அவர்களிடம் நடத்திய விசாரணையில் ஆந்திராவை சேர்ந்த நூதாக்கி ஐசக் மொத்தமாக கஞ்சாவை வாங்கி விற்பனை செய்தது தெரியவந்துள்ளது. அத்துடன் தமிழகத்தில் கல்லூரி படிப்பை முடித்த மாணவர்களை ஹரிபாபு என்பவர் கஞ்சா தொழில் ஈடுபடுத்தியது கண்டுபிடிக்கப்பட்டது. இந்த விவகாரத்தில் சென்னையை சேர்ந்த 9 பேரை நேற்று முன்தினம் விருகம்பாக்கம் போலீசார் கைது செய்தனர்.

இதற்கிடையே கஞ்சா விற்பனை கும்பலின் தலைவன் ஐசக்கை விஜயவாடாவில் தனிப்படை போலீஸ் கைது செய்தது. அத்துடன் ஹரிபாபு என்பவரையும் போலீசார் கைது செய்தனர். அவர்களிடம் மேற்கொள்ளபட்ட விசாரணையில், ஊரடங்கு காலத்தில் மது கிடைக்காமல் கஞ்சா போதைக்கு பழக்கமான மாணவர்களை மூளைச்சலவை அவர்கள் கஞ்சா விற்பனையில் ஈடுபடுத்தியது தெரியவந்தது. அத்துடன் கஞ்சாவை ஆந்திராவில் இருந்து சென்னைக்கு கடத்தி வந்து விற்பனை செய்வதற்கு, கோயம்பேடு காய்கறி வண்டிகளை அந்தக் கும்பல் பயன்படுத்தியதும் கண்டுபிடிக்கப்பட்டது.

கைதான ஹரிபாபுவின் உறவினர்கள் கோயம்பேடு மார்க்கெட்டில் காய்கறி வியாபாரம் செய்ததும், அதை பயன்படுத்தி கொண்டு கஞ்சா கடத்தியது வெளிச்சத்திற்கு வந்தது. அதுமட்டுமின்றி வாட்ஸ்அப் குழு அமைத்து கஞ்சா தேவைப்படும் கல்லூரி மாணவர்களுக்கு ஒரு கிராம் 100 ரூபாய் என்ற அடிப்படையில் விற்பனை செய்துள்ளனர். 1 கிலோ விற்பனை செய்தால் ஐசக்கிற்கு ரூ.8 ஆயிரம் கமிஷன் சென்றுள்ளது. குடும்ப வறுமையில் உள்ள மாணவர்களிடம் எளிதில் பணம் சம்பாதிக்கலாம் என ஆசைகாட்டி கஞ்சா விற்பனையில் ஈடுபடுத்தியுள்ளனர்.

இதுதொடர்பாக செய்தியாளர்களிடம் பேசிய தி.நகர் காவல்துறை துணை ஆணையர் ஹரிகிரன் பிரதாப், “ கஞ்சா விற்பனை கும்பலைச் சேர்ந்த 13 பேரை கைது செய்துள்ளோம். 9 செல்போன்கள் பறிமுதல் செய்துள்ளோம். பைக் பறிமுதல் செய்துள்ளோம். கல்லூரி மாணவர்களுக்கு போதைபொருள் தொடர்பான விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகிறோம். கைதான ஐசக் கல்லூரி படித்து முடித்த மாணவர்களை டார்கெட் வைத்து அவர்கள் மூலமாக மற்ற மாணவர்களுக்கு கஞ்சா சப்ளை செய்து வந்ததை கண்டுபிடித்துள்ளோம்.

இந்த கும்பல் எப்படி செயல்பட்டது என்பது குறித்து விசாரித்து வருகிறோம். இந்த கும்பலின் கூட்டாளிகள் வேறு யாராவது இருக்கிறார்களா? என்பது குறித்து விசாரித்து வருகிறோம். பைக் ரோந்தை அதிகப்படுத்தி உள்ளோம். உணவு சப்ளை செய்பவர்களே கஞ்சா விற்றபோது கைது செய்துள்ளோம். எல்லா தகவல்களையும் சேகரித்து கொண்டிருக்கிறோம்" என்றார்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com