வருமான வரித்துறையின் வழக்கை ரத்து செய்யக்கோரிய கார்த்தி சிதம்பரத்தின் மனு தள்ளுபடி
வருமானத்தை மறைத்ததாக தங்கள் மீது வருமான வரித்துறை தொடர்ந்த வழக்கை ரத்து செய்யக்கோரி காங்கிரஸ் எம்.பி. கார்த்தி சிதம்பரம் மற்றும் அவரது மனைவி ஸ்ரீநிதி ஆகியோர் தாக்கல் செய்த மனுக்களை சென்னை உயர் நீதிமன்ற தள்ளுபடி செய்துள்ளது.
முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரத்தின் மகனும், காங்கிரஸ் எம்.பி.யுமான கார்த்தி சிதம்பரம் மற்றும் அவரது மனைவி ஸ்ரீநிதி ஆகிய இருவர் மீதும் வருமான வரித்துறை 2018 ஆம் ஆண்டு வழக்கு தொடர்ந்தது. இந்த வழக்கு முதலில் சென்னை எழும்பூர் நீதிமன்றத்தில் நடைபெற்று வந்த நிலையில், கார்த்தி சிதம்பரம் நாடாளுமன்ற உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்பட்டார். அதனால் சென்னையில் உள்ள எம்.பி. எம்.எல்.ஏ.க்கள் மீதான வழக்குகளை விசாரிக்கும் சிறப்பு நீதிமன்றத்திற்கு மாற்றப்பட்டு விசாரணை நிலுவையில் உள்ளது.
இந்த வழக்கில் இருந்து தங்களை விடுவிக்க கோரியும், சிறப்பு நீதிமன்றத்திற்கு மாற்றிய உத்தரவை ரத்து செய்யக்கோரியும் கார்த்தி சிதம்பரம் மற்றும் அவரது மனைவி ஸ்ரீநிதி ஆகியோர் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர்.இந்த வழக்கு உயர்நீதிமன்ற நீதிபதி எம்.சுந்தர் முன் விசாரணைக்கு வந்தது.
அப்போது, இரு தரப்பும் வாதங்களை முன்வைத்தனர். வருமான வரித்துறை தரப்பில், இருவரின் கணக்குகள் தொடர்பாக மதிப்பீடு முடிந்தாலும், அதை மறுமதிப்பீடு செய்ய தங்களுக்கு அதிகாரம் உள்ளதாகவும், தொடர்ந்து சிறப்பு நீதிமன்றத்தில் குற்றச்சாட்டு பதிவு செய்ய அனுமதிக்க வேண்டும் என்றும் இருவரின் மனுக்களையும் தள்ளுபடி செய்ய வேண்டும் என்றும் வாதிடப்பட்டது
வாதங்களை கேட்ட நீதிபதி எம்.சுந்தர், இன்று அளித்த தீர்ப்பில் வருமான வரித்துறை தொடர்ந்த வழக்கை ரத்து செய்யக்கோரிய காங்கிரஸ் எம்.பி. கார்த்தி சிதம்பரம் மற்றும் அவரது மனைவி ஸ்ரீநிதி ஆகியோரின் மனுக்களை தள்ளுபடி செய்து உத்தரவிட்டார்

