“5 முறை செல்போனை மாற்றிவிட்டேன்; இருந்தபோதும் ஹேக்கிங் தொடர்கிறது” : பிரசாந்த் கிஷோர்
தன்னுடைய செல் போனை (ஹேண்ட் செட்) 5 முறை மாற்றிவிட்டதாக தேர்தல் வியூக நிபுணர் பிரசாந்த் கிஷோர் தெரிவித்துள்ளார்.
அரசியல் தலைவர்கள், வழக்கறிஞர்கள், பத்திரிகையாளர்கள் உள்ளிட்டோரின் அலைபேசிகள் 'பெகாசஸ்' உளவு மென்பொருள் மூலம் உளவு பார்க்கப்பட்டதாக ஊடகங்களில் சர்ச்சை வெடித்துள்ளது. இஸ்ரேல் நாட்டை சேர்ந்த தனியார் நிறுவனம் உருவாகியுள்ள உளவு மென்பொருள் மூலம் இந்தியாவில் உள்ள பலரது அலைபேசிகள் மத்திய அரசால் உளவுபார்க்கப்பட்டன என குற்றம்சாட்டப்பட்டுள்ளது.
காங்கிரஸ் எம்.பி ராகுல்காந்தியின் செல்போன் மற்றும் அவரின் நண்பர்கள், ஆலோசகர்களின் செல்போன்கள் உளவுபார்க்கப்பட்டதாக தகவல் வெளியாகியிருக்கிறது. மேலும், தேர்தல் வியூக நிபுணர் பிரசாந்த் கிஷோர், முன்னாள் தேர்தல் ஆணையர் அசோக் லவாசா மற்றும் பல மத்திய அமைச்சர்களின் செல்போன்களும் ஒட்டுக் கேட்கப்பட்டதாக அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது.
இதுபோல மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜியின் உறவினரும், மேற்குவங்க சட்டமன்ற உறுப்பினருமான அபிஷேக் பானர்ஜியின் செல்போனும் உளவுபார்க்கப்பட்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. தற்போது மத்திய தகவல் தொழில்நுட்பத்துறை அமைச்சராக உள்ள அஷ்வினி வைஷ்ணவின் போனும் உளவு பார்க்கப்பட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
இந்நிலையில் இதுகுறித்து என்.டி.டிவிக்கு பேசிய பிரசாந்த் கிஷோர், “என் போனை (ஹேண்ட் செட்) 5 முறை மாற்றிவிட்டேன். இருந்தாலும் பயனில்லை. ஹேக் செய்து கொண்டுதான் இருக்கிறார்கள். 2017 லிருந்து 2021 வரை போனை யாரோ ஒட்டுக்கேட்கிறார்கள் என சந்தேகம் இருந்தது. ஆனால் ஹேக் செய்கிறார்கள் என்று உணர முடியவில்லை” என்றார்.
2014ஆம் ஆண்டு பிரதமர் மோடி தலைமையிலான பாஜக ஆட்சிக்கு வந்ததில் பிரசாந்த் கிஷோருக்கு முக்கிய பங்கு உண்டு. அதேபோல் மேற்குவங்கத்தில் பாஜகவை வீழ்த்தி மம்தா பானர்ஜி மீண்டும் ஆட்சியமைக்கவும் பிரசாந்த் கிஷோரின் வியூகம் பெரிதும் உதவியது குறிப்பிடத்தக்கது.