கேரளா இல்லை.. இனி ’கேரளம்’ தான் - சட்டப்பேரவையில் நிறைவேறிய தீர்மானம்!

’கேரளா’ என்ற பெயரை ’கேரளம்’ என மாற்ற அந்த மாநில சட்டப்பேரவையில் ஒருமனதாக தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. ’கேரளம்’ என்ற பெயரை மாற்ற மத்திய அரசை கேட்டுக்கொள்வதாக அத்தீர்மானத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.
pinarayi vijayan
pinarayi vijayantwitter

கேரள சட்டப்பேரவையில் அலுவல் நடத்தை விதிகள் 118இன் கீழ் இதற்கான தீர்மானத்தை முதல்வர் பினராயி விஜயன் தாக்கல் செய்தார். அந்த தீர்மானத்தில், "மலையாளத்தில் நம் மாநிலத்தின் பெயர் கேரளம். 1956, நவம்பர் 1ம் தேதி மொழிவாரி மாநிலங்கள் மறுசீரமைக்கப்பட்டன. அதன் அடிப்படையில், நவம்பர் 1ம் தேதி கேரள தினமாகக் கொண்டாடப்படுகிறது. ஒன்றுபட்ட கேரளம் என்பது சுதந்திரப் போராட்டக் காலத்தில் இருந்தே மலையாளத்தைத் தாய்மொழியாகக் கொண்ட மக்களின் கோரிக்கையாக இருந்து வருகிறது.

ஆனால், அரசியலமைப்பின் முதல் அட்டவணை மாநிலத்தின் பெயரை கேரளா என குறிப்பிடுகிறது. அரசியலமைப்பின் 3வது பிரிவின் கீழ், மாநிலத்தின் பெயரை கேரளம் என திருத்தம் செய்ய அவசர நடவடிக்கைகள் தேவை" என தெரிவிக்கப்பட்டுள்ளது.

மலையாளத்தில் ’கேரளம்’ என்பது பொதுவாக வழக்கத்தில் இருக்கிறது. அதேநேரத்தில், ஆவணங்களில் குறிப்பாக ஆங்கிலத்தில் ’கேரளா’ எனக் குறிப்பிடப்படுகிறது. எனவே, மாநிலத்தின் பெயரை மலையாள வழக்கப்படி, ’கேரளம்’ என மாற்ற வேண்டும் என்ற கோரிக்கை நீண்ட காலமாக இருந்து வருகிறது. இதைக் கருத்தில்கொண்டு மாநில அரசு, பெயரை மாற்றுவதற்கான தீர்மானத்தை ஒருமனதாக நிறைவேற்றி இருக்கிறது.

மேலும், மாநிலத்தின் பெயரை ’கேரளம்’ என அங்கீகரிக்கத் தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு மத்திய அரசை இந்த தீர்மானம் கேட்டுக்கொண்டுள்ளது. அதோடு, 8வது அட்டவணையின்கீழ் சேர்க்கப்பட்டுள்ள அனைத்து மொழிகளிலும் ‘கேரளம்’ என மாற்ற வேண்டும் என்றும் தீர்மானத்தில் வலியுறுத்தப்பட்டுள்ளது.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com