நிலவை நெருங்கும் சந்திரயான்2: இன்று ஆர்பிட்டரில் இருந்து பிரியும் லேண்டர்!

நிலவை நெருங்கும் சந்திரயான்2: இன்று ஆர்பிட்டரில் இருந்து பிரியும் லேண்டர்!
நிலவை நெருங்கும் சந்திரயான்2: இன்று ஆர்பிட்டரில் இருந்து பிரியும் லேண்டர்!

இன்று பிற்பகல் 12:45 மணியிலிருந்து 1:45 மணிக்குள் சந்திரயான் 2 விண்கல ஆர்பிட்டரில் இருந்து விக்ரம் லேண்டரை பிரிக்கும் பணிகளை விஞ்ஞானிகள் மேற்கொள்ளவுள்ளனர்

நிலவின் தென் துருவப் பகுதியை ஆய்வு செய்வதற்காக இஸ்ரோ கடந்த ஜூலை 22ஆம் தேதி சந்திரயான் 2 விண்கலத்தை ஏவியது. திட்டமிட்டப்படி இந்த விண்கலம் பூமியை சுற்றி வந்த நிலையில் அதன் வேகம் அதிகரிக்கப்பட்டு படிப்படியாக பாதை திருப்பிவிடப்பட்டது. பூமியில் இருந்து அதிக தொலைவு கொண்ட பாதைக்கு கொண்டு செல்லப்பட்ட சந்திரயான் 2 விண்கலம், பின்னர் நிலவின் பாதைக்கு திருப்பி விடப்பட்டது. 

தொடர்ந்து, சந்திரயானின் வேகம் படிப்படியாக குறைக்கப்பட்டு சுற்றுவட்டப்பாதை மாற்றப்பட்டது. ஐந்தாவது முறையாக நேற்று மாலை 6:21 மணிக்கு மீண்டும் பாதை வெற்றிகரமாக மாற்றியமைக்கப்பட்டது. 52 விநாடிகளில் மேற்கொள்ளப்பட்ட இந்த நடவடிக்கை நிலவிலிருந்து குறைந்தபட்சம் 119 கிலோ மீட்டர் மற்றும் அதிகபட்சம் 127 கிலோமீட்டர் என்ற சுற்றுவட்டப் பாதையில் செலுத்தப்பட்டுள்ளது. 

சந்திரயான் 2 திட்டத்தில் இந்தப் பாதை மாற்றம் மிக முக்கியமான மைல்கல். இன்று பிற்பகல் 12:45 மணியிலிருந்து 1:45 மணிக்குள் ஆர்பிட்டரில் இருந்து விக்ரம் லேண்டரை பிரிக்கும் பணிகளை விஞ்ஞானிகள் மேற்கொள்வர். இதன் பின்னர் விக்ரம் லேண்டரை தரையிறக்க தேவையான இரண்டு முக்கிய பணிகள் நாளை 3ம் தேதி காலை 9 மணி முதல் 10 மணிக்குள்ளும், மற்றும் நாளை மறுநாள் 4ம் தேதி காலை 3 மணி முதல் 4 மணிக்குள்ளும் மேற்கொள்ளப்படும் என இஸ்ரோ தெரிவித்துள்ளது.

இதனை அடுத்து சரியான இடம் தேர்வு செய்யப்பட்டு விக்ரம் லேண்டர் நிலவின் தென் துருவ பகுதியில் தரையிறக்கப்படும். வரும் 7ஆம் தேதி அதிகாலை 1.30 மணியிலிருந்து 2:30 மணிக்குள் மணிக்கு விக்ரம் லேண்டர் நிலவில் தரையிறங்கும். அதன் பின்னர் விக்ரம் லேண்டர் எடுத்துச் செல்லும் பிரக்யான் ரோவர் காலை 5:30 மணியிலிருந்து 6:30 மணிக்குள் லேண்டரிலிருந்து வெளியேறி நிலவின் மேற்பரப்பில் 14 நாட்கள் சோதனைகளை மேற்கொள்ளும். லேண்டர் பிரிந்த பிறகு ஆர்ப்பிட்டரானது 100 கிலோமீட்டர் தொலைவு கொண்ட சுற்றுவட்டப்பாதையில் ஓராண்டுக்கு நிலவைச் சுற்றிவந்து புகைப்படங்களை எடுத்து அனுப்பும்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com