
ஆந்திராவில் கடந்த 2019-ல் அப்போதைய முதல்வர் சந்திரபாபு நாயுடு ஆட்சியில் திறன் மேம்பாட்டு திட்டத்தில் 3,300 கோடி ஒப்பந்தம் கையெழுத்தானது. ஆனால், இந்த திட்டம் தொடங்குவதற்கு முன்பு ஒப்பந்தப் புள்ளி கோரப்பட்டு தனியார் நிறுவனத்திற்கு 10 சதவீத நிதி ஒதுக்கீடு செய்ததாக புகார் எழுந்தது.
இது தொடர்பாக 370 கோடி அளவிற்கு மோசடி நடந்ததாக அப்போது புகார் எழுந்தது. இது குறித்து விசாரணை நடத்த தற்போதைய ஜெகன் மோகன் தலைமையிலான அரசு, காவல் துறைக்கு உத்தரவிட்டது.
ஆந்திர சிஐடி காவல் துறைக்கு வழக்கு மாற்றப்பட்டு விசாரணை நடைபெற்று வந்தது. இதையடுத்து நந்தியால் பகுதியில் இருந்த முன்னாள் முதல்வர் சந்திரபாபு நாயுடுவை சிஐடி காவல் துறையினர் கைது வாரண்ட்டை பிறப்பித்தனர். பின்னர் 12 பிரிவுகளில் கைது செய்து விஜயவாடாவில் உள்ள சிஐடி அலுவலகத்தில் விசாரணை நடத்தினர். இதைத் தொடர்ந்து 10 மணி நேரமாக நடத்தப்பட்ட விசாரணைக்கு பின்பு ஊழல் தடுப்பு நீதிமன்றத்தில் அவர் ஆஜர்படுத்தப்பட்டார்.
சந்திரபாபு நாயுடு தரப்பில் உச்சநீதிமன்ற வழக்கறிஞர் சித்தார்த் லூத்ராவும், சிஐடி காவல்துறை தரப்பில் ஏஏஜி சுதாகர் ரெட்டி ஆகியோர் வாதாடினர். 8 மணி நேரமாக நடைபெற்ற இரு தரப்பு வாதங்களையும் கேட்டறிந்த நீதிபதி, 14 நாட்கள் நீதிமன்ற காவலில் வைக்க நீதிபதி உத்தரவிட்டார். இதைத் தொடர்ந்து ஆந்திர மாநிலம் குப்பம் பகுதியில், தெலுங்கு தேசம் கட்சியினர் பந்த் அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், கடைகள் முற்றிலுமாக அடைக்கப்பட்டுள்ளது. பலத்த போலீஸ் பாதுகாப்புடன் குப்பம் பகுதியில் இருந்து தமிழகம் மற்றும் திருப்பதிக்கு அரசு பேருந்துகள் இயக்கப்பட்டு வருகிறது.
இதேபோல் திருப்பதி பேருந்து நிலையம் அருகே போராட்டத்தில் ஈடுபட்டு வரும் தெலுங்கு தேசம் கட்சியினரை போலீசார் கைது செய்து வருகின்றனர். இதேபோன்று மாநிலம் முழுவதும் தெலுங்கு தேச கட்சியினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
முக்கிய தலைவர்களை வீட்டுக்கு காவலில் வைத்துள்ளனர். இருப்பினும் மாநிலம் முழுவதும் இயல்பு வாழ்க்கை எந்தவித பாதிப்பும் இல்லாமல் செயல்பட்டு வருகிறது. பள்ளி, கல்லூரிகளுக்கு மட்டும் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.