சிறப்பு அந்தஸ்துக்காக 20-ம் தேதி உண்ணாவிரதம்: சந்திரபாபு நாயுடு அறிவிப்பு
ஆந்திராவுக்கு சிறப்பு அந்தஸ்து வழங்கக் கோரி 20 ஆம் தேதி உண்ணாவிரதம் மேற்கொள்ளப் போவதாக அம்மாநில முதலமைச்சர் சந்திரபாபு நாயுடு அறிவித்துள்ளார்.
குண்டூர் மவட்டம் அயினவாலு கிராமத்தில் நடந்த டாக்டர் அம்பேத்கர் பிறந்தநாள் விழாவில் பங்கேற்ற அவர், பிரதமர் மோடி மற்றும் மத்திய அரசுக்கு எதிராக தொடர்ந்து போராடப் போவதாகவும் தெரிவித்தார். தமது பிறந்தநாளான ஏப்ரல் 20 ஆம் தேதி அதிகாலை முதல் மாலை வரை உண்ணாவிரதம் இருக்கப் போவதாக அறிவித்த அவர், நாடாளுமன்றம் முடக்கப்பட்டதற்கு கண்டனம் தெரிவிக்கும் விதமாக பிரதமர் மோடி அண்மையில் உண்ணாவிரதம் இருந்ததாகவும், ஆனால் உண்மையில் நாடாளுமன்றம் முடங்கியதற்கு அவர் தான் காரணம் என்றும் குற்றம்சாட்டினார். மத்தியில் பாரதிய ஜனதா ஆட்சி அமைப்பதற்கு தெலுங்கு தேசம் முக்கிய பங்கு வகித்ததாகவும், எதிர்காலத்திலும் இதே நிலைமை தொடரும் என்றும் சந்திரபாபு நாயுடு கூறினார்.