சந்திரபாபு நாயுடுவை விட அவரது 3 வயது பேரனுக்கு சொத்து அதிகம்!
ஆந்திர மாநில முதலமைச்சர் சந்திரபாபு நாயுடுவை விட, அவரது மூன்று வயது பேரனுக்கு அதிக சொத்து இருப்பது தெரிய வந்துள்ளது.
ஆந்திர மாநில முதலமைச்சரும் தெலுங்கு தேசக் கட்சி தலைவருமான சந்திரபாபு நாயுடு, கடந்த 8 வருடங்களாக, வருடம் தோறும் தங்கள் குடும்பத்தினரின் சொத்து விவரங்களை வெளியிட்டு வருகிறார். வெளிப்படைத்தன்மைக்காக இவ்வாறு செய்துவரும் அவர், இந்த ஆண்டும் சொத்து விவரங்களை வெளியிட்டார். அவர் மகனும் தகவல் தொடர்பு மற்றும் பஞ்சாயத்து ராஜ் அமைச்சருமான நாரா லோகேஷ் இந்த சொத்து மதிப்புகளை வெளியிட்டார்.
அதில், அவர் குடும்பத்தினருக்கு ரூ.81.83 கோடி சொத்து இருப்பதாகவும் இது கடந்த ஆண்டை விட ரூ.12.55 கோடி அதிகரித்துள்ளதாகவும் கூறப் பட்டுள்ளது.
சந்திரபாபு நாயுடுவின் சொத்து மதிப்பு ரூ.8.30 கோடி. இதில் கடன் ரூ.5.31 கோடி. இதனால் நிகர சொத்தின் மதிப்பு ரூ.2.99 கோடியாகும். இவரது சொத்து மதிப்பு கடந்த ஆண்டை விட, இந்த ஆண்டு 18.18 சதவிகிதம் அதிகரித்துள்ளது. அவரை விட அவரது 3 வயது பேரன் தேவன்ஷ், அதிக சொத்துக்கு அதிபதியாக இருக்கிறது. பேரனின் சொத்து மதிப்பு 18.71 கோடி.
சந்திரபாபு நாயுடுவின் மனைவி புவனேஷ்வரியின் சொத்து மதிப்பு ரூ.31.01 கோடியாக உள்ளது என்றும் இது கடந்த ஆண்டு 25. 41 கோடியாக இருந்தது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இவர், ஹெரிடேஜ் புட்ஸ் லிமிடெட் நிறுவனத்தை நடத்தி வருகிறார்.

