‘சேவாமித்ரா’ செயலியால் சந்திரபாபு நாயுடுவிற்கு ஏற்பட்ட தலைவலி

‘சேவாமித்ரா’ செயலியால் சந்திரபாபு நாயுடுவிற்கு ஏற்பட்ட தலைவலி
‘சேவாமித்ரா’ செயலியால் சந்திரபாபு நாயுடுவிற்கு ஏற்பட்ட தலைவலி

தாவூத் இப்ராஹிம் போல எவராலும் எளிதில் கண்டுபிடிக்க முடியாதவராக தற்போது ஜெகன்மோகன் ரெட்டி உள்ளார் என ஆந்திர முதலமைச்சர் சந்திரபாபு நாயுடு தெரிவித்துள்ளார்.

‘சேவாமித்ரா’ என்ற செயலியை தெலுங்கு தேசம் கட்சி அறிமுகபடுத்தி அதனைப் பயன்படுத்தி வருகிறது. இந்தச் செயலின் மூலம் ஆந்திர அரசு மக்களின் தகவல்களை திருடியுள்ளதாக ஏதிர்கட்சிகள் குற்றஞ்சாட்டி வருகின்றன. குறிப்பாக இந்தச் செயலியின் மூலம் மக்களின் தகவல்கள் மற்றும் அவர்களின் வாக்களிக்கும் மனநிலை ஆகியவற்றை தெலுங்கு தேசம் கட்சி  சேகரித்து வருவதாக புகார்கள் எழுந்தன. 

இதனையடுத்து இந்தச் செயலியை தயாரித்த தகவல்தொடர்பு நிறுவனத்தின் மேல் வழக்குப் பதிவு செய்யப்பட்டது. இந்த நிறுவனம் ஹைதராபாத்திலுள்ளதால் சந்திரசேகரராவ் தலைமையிலான தெலுங்கானா மாநில அரசு இந்த வழக்கு குறித்து விசாரிக்க ஒரு சிறப்புப் புலனாய்வு குழுவை அமைத்தது. 

இந்தச் சிறப்பு புலனாய்வு குழுவும் அந்த நிறுவனத்தில் சோதனை நடத்தி சில ஆதராங்களை சேகரித்தது. இதனையடுத்து நேற்று முதல் ‘சேவாமித்ரா’ செயலியையும் தெலுங்கு தேசம் கட்சியின் வலைத்தளத்தை அக்கட்சியே முடக்கியது. தெலுங்கானா அரசின் அதிரடி விசாரணையை தெலுங்கு தேசம் கட்சியின் தலைவரும் ஆந்திர முதல்வருமான சந்திரபாபு நாயுடு வன்மையாக கண்டித்துள்ளார். 

இதுகுறித்து அவர், “தெலுங்கானா அரசு அரசியல் காழ்ப்புணர்ச்சி காரணமாக எங்கள் மீது பழி போடுகிறது. அத்துடன் மத்திய அரசும் தெலுங்கானா அரசும் அதிகாரத்தை துஷ்பிரயோகம் செய்துவருகின்றன. அவர்களுக்கு யார் இவ்வளவு அதிகாரம் கொடுத்துள்ளது என்பது தெரியவில்லை. மேலும் இந்த விவகாரத்தில் தெலுங்கானா அரசு ஒய்.எஸ்.ஆர் கட்சிக்கு சாதகமாக செயல்படுகிறது” எனக் கூறினார்.

இந்நிலையில் இன்று இந்த விவகாரம் குறித்து மற்றொரு கருத்தை சந்திரபாபு நாயுடு தெரிவித்துள்ளார். அதில் “தாவூத் இப்ராஹிமை எங்கும் காண முடியவில்லை. ஆனால் அனைவரும் அவரைப் பார்த்து பயப்படுகிறார்கள். அதேபோல தான் ஜெகன்மோகன் ரெட்டியும் தற்போது இருக்கிறார்” எனத் தெரிவித்துள்ளார்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com