செல்லாத 8 வாக்குகள்; ஜெயித்த பாஜக வேட்பாளர்.. என்ன நடந்தது.. சண்டிகர் மேயர் தேர்தலில் மோசடியா?

சண்டிகர் மாநகராட்சி மேயர் தேர்தலில் பாஜக வேட்பாளர் வெற்றிபெற்றுள்ளார். இதில் 8 வாக்குகள் செல்லாதவை என அறிவிக்கப்பட்டதால், ஆம் ஆத்மி - காங்கிரஸ் கூட்டணி நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்ய உள்ளது.
சண்டிகர் மேயர் தேர்தல்
சண்டிகர் மேயர் தேர்தல்ani

சண்டிகர் மாநகராட்சி மேயர் தேர்தல்

பஞ்சாப் மற்றும் ஹரியான மாநிலங்களின் தலைநகரான சண்டிகர் நகரின் மாநகராட்சி மேயர் தேர்தல், கடந்த ஜனவரி 18 ஆம் தேதி நடைபெற இருந்தது. ஆனால், தேர்தல் தலைமை அதிகாரிக்கு உடல்நலக் குறைவு ஏற்பட்டதால் தேர்தல் ஒத்திவைக்கப்பட்டது. இதைத் தொடர்ந்து காங்கிரஸ் உயர்நீதிமன்றத்தை அணுகியதால் தேர்தலை நடத்த பஞ்சாப் மற்றும் ஹரியானா உயர்நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்தது. அதன்படி, சண்டிகர் மாநகராட்சி மேயர், மூத்த மேயர், துணை மேயர் ஆகிய பதவிகளுக்கான வாக்குப்பதிவு இன்று (ஜன.30) நடைபெற்றது. இதில் காங்கிரஸ் – ஆம் ஆத்மி கட்சி இணைந்து போட்டியிட்டது. I-N-D-I-A கூட்டணியின் அடிப்படையில் ஆம் ஆத்மி கட்சி மேயர் பதவிக்கும், காங்கிரஸ் கட்சி மூத்த துணைமேயர் மற்றும் துணைமேயர் பதவிக்கும் பாஜகவை எதிர்த்துப் போட்டியிட்டன.

16 வாக்குகள் பெற்று பாஜக வேட்பாளர் வெற்றி!

இதில் ஆம் ஆத்மி - காங்கிரஸ் சார்பில் மேயர் பதவிக்கு குல்தீப் சிங் நிறுத்தப்பட்டார். இவரை எதிர்த்து பாஜக சார்பில் மனோஜ் சோங்கர் போட்டியிட்டார். சுமார் இரண்டு மணி நேரத்திற்கு மேலாக நடைபெற்ற இந்த வாக்குப்பதிவில் 36 மொத்த வாக்குகளும் பதிவாகின. இதில் மனோஜ் சோங்கருக்கு 16 வாக்குகளும், குல்தீப் சிங்கிற்கு 12 வாக்குகளும் கிடைத்தன. எஞ்சிய I-N-D-I-A கூட்டணியின் 8 வாக்குகள் செல்லாது என்று அறிவிக்கப்பட்டன. இதன்மூலம் பாஜக வேட்பாளர் வெற்றிபெற்றதாக அறிவிக்கப்பட்டது.

சண்டிகர் மேயர் தேர்தலில் மோசடியா?

இதற்கு ஆம் ஆத்மி, காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்தன. பாஜகவை வெற்றிபெறச் செய்ய வேண்டும் என்பதற்காகவே 8 வாக்குகள் செல்லாது என்று தேர்தல் அதிகாரி அறிவித்ததாகவும், அவர் உள்நோக்கத்துடன் செயல்பட்டிருக்கிறார் எனவும் குற்றச்சாட்டுகளை வைத்துள்ளது அக்கூட்டணி. சண்டிகர் மாநகராட்சியில் ஆம் ஆத்மி மற்றும் காங்கிரஸ் ஆகிய கட்சிகளின் கவுன்சிலர்கள் 20 பேர் உள்ளனர். பாஜகவிற்கு 15 பேர்தான் உள்ளனர். சிரோன்மணி அகாலி தளத்திற்கு 1 கவுன்சிலர் இருக்கிறார். எனவே செல்லாது என்று அறிவிக்கப்பட்ட வாக்குகள் அனைத்தும் ஆம் ஆத்மி, காங்கிரஸ் கட்சியினரின் வாக்குகள். ஆகையால் திட்டமிட்டு மோசடி நடந்துள்ளது என அக்கூட்டணி கட்சியினர் புகார் தெரிவித்துள்ளனர். இதுதொடர்பாக பஞ்சாப் மற்றும் அரியானா உயர்நீதிமன்றத்தை அணுகப்போவதாக ஆம் ஆத்மி கட்சி அறிவித்துள்ளது.

இதுகுறித்து ஆம் ஆத்மி வேட்பாளர் குல்தீப் குமார், ”இது, எனக்கு மிகவும் அதிர்ச்சியாக இருக்கிறது. வாக்கு எண்ணிக்கையின்போது கட்சிகளின் பிரதிநிதிகள் யாரும் உள்ளே அனுமதிக்கப்படவில்லை. ஆனால் கடந்தகாலங்களில் அப்படி இல்லை. அரசியல் கட்சி பிரதிநிதிகளின் முன்னிலையில்தான் வாக்குகள் எண்ணப்படும். இந்த விவகாரம் தொடர்பாக நாங்கள் நீதிமன்றத்தை நாடுவோம்” எனத் தெரிவித்துள்ளார்.

டெல்லி முதலவர் அரவிந்த் கெஜ்ரிவால் கருத்து

சண்டிகர் மாநகராட்சி மேயர் தேர்தல் குறித்து டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால், “பகலில் இப்படியோர் அநீதி நிகழ்ந்துள்ளது. இது மிகவும் கவலை தருகிறது. மேயர் தேர்தலிலேயே இப்படி மோசடிகள் நடைபெற்றால் சட்டப்பேரவை மற்றும் நாடாளுமன்றத் தேர்தல்களில் எந்த ஒரு முறைகேடான செயலிலும் ஈடுபடுவர் என்பதில் சந்தேகமில்லை. இது, மிகமிக கவலை அளிப்பதாக உள்ளது” என தனது எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளார்.

சண்டிகர் மாநகராட்சியின் புதிய மேயராக பாஜக கவுன்சிலர் மனோஜ் சோங்கர் பதவியேற்றார். கடந்த 8 ஆண்டுகளாக மேயர் பதவியை வகித்து வரும் பாஜகவுக்கு எதிராக காங்கிரஸ் மற்றும் ஆம்ஆத்மி கட்சிகள் இணைந்து தேர்தலில் போட்டியிட்டதால் இது முக்கியத்துவம் பெற்றது. பின்னர், புதிதாக தேர்ந்தெடுக்கப்பட்ட மேயர் மூத்த துணை மேயர் மற்றும் துணை மேயர் பதவிகளுக்கான தேர்தலை நடத்தினார்.

8 வாக்குகள் செல்லாது என அறிவிக்கப்பட்டதை எதிர்த்து ஆம் ஆத்மி மற்றும் காங்கிரஸ் சார்பில் பஞ்சாப் மற்றும் ஹரியானா உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. இதனை அவசர வழக்காக நாளை விசாரணைக்கு நீதிமன்றம் எடுக்கவுள்ளது.

இதுதொடர்பாக ஆம் ஆத்மி மற்றும் காங்கிரஸ் சார்பிலான வழக்கழிஞர் பெர்ரி சோஃபட் கூறுகையில், “மேயர் தேர்தல் தொடர்பாக நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளோம். நாளை விசாரிக்க நீதிமன்றம் அனுமதித்துள்ளது. பாஜக இன்று செய்துள்ளது ஜனநாயகத்தை அழிக்கும் செயல். ஒட்டுமொத்த நாடும் பார்த்துக் கொண்டிருக்கிறது. தேர்தலை ஹைஜாக் செய்ய முயற்சித்துள்ளார்கள். இந்த ரிட் மனுவில் ஒட்டுமொத்த தேர்தல் நடைமுறை குறித்து கேள்வி எழுப்ப உள்ளோம். முறையான ஆவணங்களையும் தாக்கல் செய்துள்ளோம்” எனக் குறிப்பிட்டுள்ளார்.

Related Stories

No stories found.
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com