
நாட்டில் பல்வேறு மாநிலங்களில் வரலாறு காணாத அளவுக்கு தக்காளி விலை உயர்ந்திருப்பதால், பொதுமக்கள் பலரும் சிரமத்திற்கு ஆளாகி உள்ளனர். இன்றும் சில மாநிலங்களில் தக்காளி கிலோ ரூ. 100 முதல் ரூ.120 வரை விற்கப்படுகிறது. இது ஒருபுறமிருக்க, மறுபுறம் தக்காளியால் பல்வேறு விநோத சம்பவங்களும் நடந்துவருகிறது.
உதாரணத்துக்கு மகாராஷ்டிராவைச் சேர்ந்த விவசாயி ஒருவர் தக்காளி விற்பனையால் ஒரு மாதத்தில் கோடீஸ்வரர் ஆனதாகவும், மத்தியப் பிரதேசத்தில் செல்போன் கடைக்காரர் ஒருவர் தனது கடையில் ஸ்மார்ட்போன் வாங்குபவர்களுக்கு தக்காளியை இலவசமாக வழங்கி வருவதாகவும் செய்திகள் வெளியாகின.
போலவே பஞ்சாப்பில் காலணி கடை உரிமையாளர் ஒருவர் தனது கடையில் ரூ.1,000 - ரூ.1,500 வரையில் காலணிகளை வாங்கினால் அவர்களுக்கு 2 கிலோ தக்காளியை இலவசமாக வழங்கி வருவதாகவும் செய்திகள் வந்தன. ஒருவர் தன் தக்காளி கடைக்கு காவலர்களை நியமித்திருந்ததும் நடந்தது. இதேபோல மத்தியப் பிரதேசத்தில் தக்காளியால் சண்டை ஏற்பட்டு ஒரு குடும்பமே பிரிந்ததாக ஊடகங்களில் செய்திகள் வெளியாகின.
இந்த நிலையில் ஆட்டோ டிரைவர் ஒருவர் சில நிபந்தனைகளுடன் தக்காளியை இலவசமாக வழங்கி வருகிறார். சண்டிகரைச் சேர்ந்தவர் அருண். ஆட்டோ ஓட்டுநராக உள்ள இவர், கடந்த 12 ஆண்டுகளாக இந்திய ராணுவ வீரர்களை இலவசமாக அழைத்துச் செல்கிறார். அதுபோல் கர்ப்பிணிகளையும் தன்னுடைய ஆட்டோ ரிக்ஷாவில் இலவசமாகவே மருத்துவமனைகளுக்கு அழைத்துச் செல்கிறார்.
இவற்றுடன் தற்போது தன்னுடைய ஆட்டோவில் சவாரி செய்யும் பயணிகளுக்கு, ஒரு கிலோ தக்காளியை இலவசமாக வழங்கி வருகிறார். இதில் ஒரே ஒரு கண்டிஷனாக, 5 முறை பயணம் செய்ய வேண்டுமென சொல்லியிருக்கிறாராம். ’இதுபோன்ற சேவைகளை வழங்குவதன் மூலம் மனநிறைவாக இருக்கிறது’ என்று சொல்லியிருக்கும் அருண், அக்டோபரில் நடைபெறவிருக்கும் பாகிஸ்தானுடனான கிரிக்கெட் போட்டியில் இந்தியா வெற்றி பெற்றால் சண்டிகரில் 5 நாட்களுக்கு ஆட்டோவை இலவசமாக இயக்க இருப்பதாக தெரிவித்துள்ளார்.