குடிசை வீட்டில் இருந்து பாஜக எம்எல்ஏ.. நெட்டிசன்கள் கொண்டாடும் சந்தனா யார்?!

குடிசை வீட்டில் இருந்து பாஜக எம்எல்ஏ.. நெட்டிசன்கள் கொண்டாடும் சந்தனா யார்?!
குடிசை வீட்டில் இருந்து பாஜக எம்எல்ஏ.. நெட்டிசன்கள் கொண்டாடும் சந்தனா யார்?!

குடிசை வீடே தனது அடையாளமாக இருந்த ஏழை பெண் ஒருவர், மேற்கு வங்கத் தேர்தலில் வெற்றிபெற்று அனைவரின் புருவங்களையும் உயர்த்த வைத்துள்ளார். சந்தனா பவுரி என்ற அந்தப் பெண்ணின் பயணத்தை இங்கே பார்க்கலாம்!

மேற்கு வங்க சட்டப்பேரவை தேர்தலில் வரலாற்று சிறப்புமிக்க வெற்றியை பெற்று 3ம் முறையாக ஆட்சியில் அமர்ந்திருக்கிறார், மம்தா பானர்ஜி. மம்தாவின் அலையில் தங்களின் ஆட்சி கனவை பறிகொடுத்திருக்கிறது பாஜக. பாஜக தோல்வியை தழுவினாலும், பாஜக சார்பில் போட்டியிட்ட பெண் வேட்பாளர்கள் சிலர் பலரின் கவனங்களையும், பாராட்டுகளையும் பெற்று வருகின்றனர். அப்படியானவர்களில், சல்தோரா தொகுதியில் பாஜக சார்பில் போட்டியிட்ட சந்தனா பவுரி முக்கியமானவர்.

பட்டியலின பெண்ணான இவர், இவ்வளவு தூரம் கொண்டாடப்படுவதற்கு இவரின் பின்புலம் முக்கிய காரணம். மேற்குவங்கத்தின் சல்தோரா தொகுதியில் இருக்கும் கங்கை கரையில் அமைந்துள்ள கிராமமான கேலாயில் என்ற கிராமம்தான், சந்தனாவின் பூர்வீகம். இந்தக் கிராமத்தில் கழிப்பறை வசதியில்லாத, தண்ணீர் வசதியில்லாத மண் குடிசை வீடு தான் சந்தனாவின் அடையாளம். மேற்குவங்க சட்டப்பேரவை தேர்தலில் போட்டியிட்டவர்களில் மிகவும் ஏழை வேட்பாளர் என்றால் அது சந்தனா பவுரி தான்.

சந்தனாவின் கணவர் ஷரவன் தினக்கூலியாக கட்டிட பணி செய்து வருகிறார். அதில் அவருக்கு கிடைக்கும் வருமானம் ரூ.400 மட்டுமே. இதுபோக அவர்களின் குடும்பத்தில் 3 ஆடு, 3 மாடு உள்ளது. கட்டிட பணி இல்லாத நாளில் ஷரவன், சந்தனாவுடன் இணைந்து தேசிய ஊரக வேலைக்குச் செல்கிறார். இதை தாண்டி அந்த குடும்பத்தில் வருமானத்துக்கு வேறு வழியில்லை. தனது குடிசை வீட்டில் இரண்டே இரண்டு சிறிய அறைகள், அதில் ஒரு அலுமினிய பெட்டி, ஒரு மேசை, ஒரே ஒரு மின்விசிறி, சில பள்ளி புத்தகங்கள் என சந்தனாவுக்கு 31,975 ரூபாய் மதிப்பில் அசையா சொத்துகளும், வங்கிக் கணக்கில் ரூ.6,335-ம் இருப்பு இருக்கிறது. இந்த சொத்த மதிப்போடு சேர்த்து, தான் வைத்திருக்கும் மாடுகளில் ஒன்று திருமணத்துக்கு தனக்கு சீர்வரிசையாக கொடுக்கப்பட்டது என வேட்பு மனுவில் தன் சொத்து விவரங்களை சந்தனா பவுரி குறிப்பிட்டுள்ளார். 

இதற்கு முன் பஞ்சாயத்து தேர்தலில்கூட சந்தனா போட்டியிட்டதில்லை. அப்படியான ஒருவரை, பாஜக வேட்பாளராக்கியது ஏன் என்பதற்கு பின்னணியில், ஒரு சுவாரஸ்யம் ஒளிந்திருக்கிறது. கடந்த சில வருடங்களாக பாஜகவில் இணைந்து தீவிரமாக பணியாற்றி வந்திருக்கிறார் சந்தனா. சொல்லப்போனால் தான் இருந்த பகுதிகளில் எங்கு பாஜக கூட்டங்கள் நடைபெறுகிறது என்று தெரிந்தாலும், அழைப்பு இருந்தாலும் இல்லாவிட்டாலும் தானாக சென்று கலந்துகொள்ளும் அளவுக்கு ஈடுபாட்டோடு இருந்திருக்கிறார். கட்சி பணிகளை தாண்டி கட்சி சார்பில் அந்தப் பகுதியில் நிறைய தொண்டுகளையும் செய்து வந்துள்ளார். இப்படி கட்சியில் சந்தனா காட்டி வந்த ஈடுபாட்டை பார்த்து, எத்தனையோ பேர் போட்டிப்போட முன்வந்தபோதும், பாஜக இவருக்கு சீட் கொடுத்துள்ளது.

இவர் வேட்பாளராக தேர்வுசெய்யப்பட்ட தகவலை, முதலில் அவரேவும் நம்பாமல் இருந்திருக்கிறார். அக்கம் பக்கத்தினர், தொலைக்காட்சியினில் வேட்பாளர் அறிமுகம் வருவதை பார்த்து, இவரிடம் வந்து உறுதியாக சொன்ன பிறகே நம்பியிருக்கிறார். இதன்பின் ஒவ்வொரு நாளும் காவிநிறத்தில் சேலை அணிந்துகொண்டு தனியாளாக தொகுதியில் பிரச்சாரத்தில் ஈடுபட்டு வந்துள்ளார். வீதிவீதியாக மக்களை சந்தித்து ஆதரவு திரட்டி வந்திருக்கிறார்.

சல்தோரா தொகுதியில் சந்தனாவின் பிரதான எதிரியாக இருந்த கட்சி, திரிணாமுல் காங்கிரஸ். கடந்த இரண்டு தேர்தலாக திரிணாமுல் காங்கிரஸ் கட்சியின் கோட்டையாக இருந்து வந்துள்ளது சல்தோரா. திரிணாமுல் சார்பில் இந்த பகுதியின் வலுவான தலைவராக இருக்கும் அக்கட்சியின் சந்தோஷ் குமார் மொண்டல் கடந்த இரண்டு முறையாக இதே தொகுதியில் தேர்ந்தெடுக்கப்பட்டிருந்தார். இந்த முறையும் அவரே அங்கு வேட்பாளராக சந்தனாவை எதிர்த்து களமிறங்கினார். ஆனால், யாரும் எதிர்பாராத வகையில் சந்தனா பவுரி சந்தோஷ் குமாரை 4000 வாக்குகள் வித்தியாசத்தில் தோற்கடித்து அசத்தியிருக்கிறார் சந்தனா. அடிமட்டத்திலிருந்து வந்து, அவர் பெற்ற இந்த வெற்றி, அவரை நெட்டிசன்கள் கொண்டாட காரணமாக அமைந்துள்ளது.

 இணையம் சந்தனாவை தலையில் தூக்கி வைத்து கொண்டாடிக்கொண்டிருக்கும் இதேநேரத்தில், சந்தனா, கொண்டாடட்டங்களை புறந்தள்ளிவைத்துவிட்டு அந்தப் பகுதியின் பெண்கள் மற்றும் குழந்தைகளின் முன்னேற்றத்திற்கு உழைக்கப்போவதாக கூறியிருக்கிறார். சந்தனா பவுரி பள்ளியில் படித்துக்கொண்டிருந்த போதே அவரின் தந்தை உயிரிழக்க, குடும்ப வறுமை காரணமாக சிறுவயதிலேயே திருமணம் செய்யும் நிலைக்கு தள்ளப்பட்டிருந்திருக்கிறார். தொடர்ந்து வறுமை விரட்ட, தற்போது அவரின் 3 குழந்தைகளும் பள்ளிக்கல்வியை தொடர முடியாமல் உள்ளனர். இதையடுத்தே இப்படி பெண்கள் மற்றும் குழந்தைகளின் முன்னேற்றத்திற்கு உழைக்கப்போவதாக நம்பிக்கை வார்த்தைகளை உதிர்த்துள்ளது, பல பெண்களுக்கு நம்பிக்கையை விதைத்துள்ளது.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com