கர்நாடகா| ’புர்கா அணியாதவர்கள் நரகத்திற்கு செல்வார்கள் ’ - பள்ளி சிறுமியின் கருத்தால் சர்ச்சை!
புர்கா அணியாமல் குட்டையான உடை அணிபவர்கள் இறந்தபின் அவர்களது உடல்களை பாம்புகள், தேள்கள் தின்றுவிடும் என்றும், அவர்கள் நரகத்திற்குதான் செல்வார்கள் என்று நான்காம் வகுப்பு மாணவி கூறியிருப்பது சர்ச்சையை கிளப்பியுள்ளது.
கர்நாடகாவில் சாமராஜ்நகர் மாவட்டத்தில் அமைந்துள்ள தனியார் பள்ளியில், அறிவியல் கண்காட்சிக்காக ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. அங்குதான் மதம் சார்ந்த கருத்தை நான்காம் வகுப்பு மாணவி ஒருவர் தெரிவித்திருப்பது விமர்சனங்களை பெற்றுவருகிறது.
இந்தியா டுடே செய்தியின் படி, அந்த வீடியோவில் இரண்டு பொம்மைகள் உள்ளது. ஒரு பொம்மை புர்கா அணிந்தபடியும், மற்றொரு பொம்மை மேற்கத்திய ஆடை அணிந்தும் இருந்தது.
இவற்றின் பக்கவாட்டில் இருந்த இரண்டு சவப்பெட்டிகளும் இருந்தது. புர்கா அணிந்த பொம்மையில் பக்கவாட்டு சவப்பெட்டியில் இருந்த பொம்மையின் மீது பூக்களும், மேற்கத்திய ஆடையை அணிந்திருந்த சவப்பெட்டியில் இருந்த பொம்மையின் மீது, தேள்களும் பாம்புகளும் வரையப்பட்டிருந்தது.
இதுகுறித்து விளக்கமளித்த சம்பந்தப்பட்ட மாணவி, “ நீங்கள் பர்தா அணிந்திருந்தால் , இறந்தபிறகு உங்களின் உடலுக்கு எதுவும் நடக்காது. ஆனால், நீங்கள் குட்டையான ஆடைகளை அணிந்தால் நீங்கள் நரகத்திற்குச் செல்வீர்கள். பாம்புகளும் தேள்களும் உங்கள் உடலைத் தின்றுவிடும். மேலும், புர்கா அணியாமல், தன் மனைவியை வெளியே நடமாட அனுமதிக்கும் கணவர், மிகவும் மோசமானவர். “ என்று கூறியுள்ளார்.
இதுப்போன்ற சம்பவம் நடந்திருப்பது பெரும் கண்டனத்தை பெற்றுவருகிறது. பள்ளியில், மதம் சார்ந்த கருத்துகள் தெரிவிக்கப்பட்டிருப்பது விவாதத்தை தூண்டியதுள்ளது .
இதுகுறித்து, சாம்ராஜ் நகர் பொதுக்கல்வி துணை இயக்குனர் ராஜேந்திர ராஜே அர்ஸ் கூறுகையில், ''இது குறித்து சம்பந்தப்பட்ட பள்ளி நிர்வாகத்திடம் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. வட்டார கல்வி அலுவலரிடம் அறிக்கை சமர்ப்பிக்கும்படி கூறியுள்ளேன். விரைவில் முழுமையான பதில் அளிக்கப்படும்,” என்றார்.