"ஆக்சிஜன் பற்றாக்குறையால் இறந்தோர் பட்டியலை அனுப்புக" - மாநிலங்களுக்கு மத்திய அரசு கடிதம்

"ஆக்சிஜன் பற்றாக்குறையால் இறந்தோர் பட்டியலை அனுப்புக" - மாநிலங்களுக்கு மத்திய அரசு கடிதம்

"ஆக்சிஜன் பற்றாக்குறையால் இறந்தோர் பட்டியலை அனுப்புக" - மாநிலங்களுக்கு மத்திய அரசு கடிதம்

கொரோனா இரண்டாவது அலையில், ஆக்சிஜன் பற்றாக்குறையால் உயிரிழந்தோர் பட்டியல் அடங்கிய விரிவான அறிக்கையை அனுப்ப மாநில அரசுகளுக்கு மத்திய சுகாதாரத்துறை உத்தரவிட்டுள்ளது. மாநில அரசுகளின் தலைமைச் செயலர்கள், சுகாதாரத்துறை செயலர்களுக்கு இது தொடர்பாக கடிதம் எழுதியிருக்கும் மத்திய சுகாதாரத்துறை செயலாளர் ராஜேஷ் பூஷன், ஆகஸ்ட் 13 ம் தேதிக்குள் அந்த தரவுகளை வழங்க வேண்டுமென குறிப்பிட்டுள்ளார்.

முன்னதாக ஆக்சிஜன் பற்றாக்குறையால் ஏற்பட்ட உயிரிழப்புகள் குறித்து காங்கிரஸ் உறுப்பினர் கே.சி.வேணுகோபால் நாடாளுமன்ற கூட்டத்தொடரில் கேள்வி எழுப்பியதை தொடர்ந்து, மத்திய சுகாதாரத்துறை இணை அமைச்சர் பாரதி பிரவீன் பவார் எழுத்துபூர்வமாக அளித்த பதிலில், ‘ஆக்சிஜன் பற்றாக்குறையால் யாரும் இறக்கவில்லை என்பது மாநில அரசுகள் அளித்த அறிக்கை மூலம் தெரிய வருகிறது’ என்று கூறியிருந்தார். இரண்டாம் அலை கொரோனாவில் இந்தியாவில் நிலவிய மிகமோசமான தட்டுப்பாடுகளில் முக்கியமானது ஆக்சிஜன் தட்டுப்பாடுதான்.

பலரும் ஆக்சிஜன் இல்லாமல் மிக மோசமாக பாதிக்கப்பட்டதை நாட்டு மக்கள் அனைவருமே கண்கூடாக பார்த்த சூழலில், ஆக்சிஜன் தட்டுப்பாட்டால் ஒருவர் கூட இறக்கவில்லை என்பது ஏற்கும்படி இல்லை என பலரும் எதிர்க்கருத்து கூறினர். எதிர்க்கட்சிகள் யாவும், இக்கருத்துக்கு நாடாளுமன்றத்தில் எதிர்க்குரல் எழுப்பின. இப்படியாக இவ்விவகாரம் மிகப்பெரிய சர்ச்சையை ஏற்படுத்தியிருந்தது.

சர்ச்சையை தொடர்ந்து மத்திய அமைச்சர் அதற்கு விளக்கமளித்தார். அவ்விளக்கத்தில் கொரோனா மரணங்களை எவ்வாறு வகைப்படுத்தி தெரிவிக்க வேண்டும் என்பது குறித்து வழிகாட்டு நெறிமுறைகளை மத்திய அரசு வெளியிட்டிருந்ததாகவும், அதன்படி பார்த்தால் மாநில அரசுகள் மற்றும் யூனியன் பிரேதசங்களில் ஆக்சிஜன் பற்றாக்குறையால் ஒருவர் கூட இறக்கவில்லை என்றே தங்களுக்கு தெரிய வருகிறது என்றும் மத்திய அமைச்சர் தெரிவித்திருந்தார்.

இருப்பினும் சர்ச்சை தொடர்ந்து இருந்ததால், தற்போது மத்திய சுகாதாரத்துறை செயலாளர் ராஜேஷ் பூஜன் இந்த கடிதத்தை மாநில அரசுகளுக்கு எழுதியிருக்கிறார். விரைவில் இவ்விவகாரம் குறித்த உண்மை முழுமையாக வெளிவருமென எதிர்ப்பார்க்கலாம்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com