விரைவில் கோதாவரியும் காவிரியும் இணையும் - நிதின் கட்கரி
60 ஆயிரம் கோடி மதிப்பிலான கோதாவரி மற்றும் காவேரி நதிகளை இணைக்கும் திட்டத்தை விரைவில் மத்திய அரசு அமல்படுத்தும் என மத்திய நீர்வளத்துறை அமைச்சர் நிதின் கட்கரி தெரிவித்துள்ளார்.
அமராவதியில் பாஜக நிர்வாகிகள் சந்திப்பு நிகழ்ச்சியில் மத்திய நீர்வளத்துறை அமைச்சர் நிதின் கட்கரி கலந்து கொண்டு அவர்கள் மத்தியில் உரையாற்றினார். அப்போது, காவிரி நதிநீர் தொடர்பாக தமிழகம், கர்நாடகா இடையே சர்ச்சை நீடித்து வருவதாகவும் எனவே கோதாவரி தண்ணீரை தமிழகத்துக்கு கொண்டு செல்ல முடிவு செய்துள்ளதாகவும் தெரிவித்தார்.
ஆவியாதல் மூலமாக நீர் வீணாவதால் இந்தத் திட்டத்திற்கு கால்வாய்களை பயன்படுத்தாமல் மெல்லிய தடிமன் கொண்ட இரும்பு குழாய்கள் மூலம் தண்ணீர் கொண்டு செல்லப்படும் எனவும் இந்தத் தொழில்நுட்பத்தை அமெரிக்காவில் வசித்து வரும் ஆந்திர மாநில பொறியாளர் ஒருவர் பரிந்துரைத்துள்ளார் எனவும் குறிப்பிட்டார்.
கோதாவரி நதி மூலம் தமிழகத்தின் பிரச்னை முடிவுக்கு வரும் என நிதின் கட்கரி தெரிவித்தார். ஆண்டுதோறும் 1100 டிஎம்சி அடி கோதாவரி தண்ணீர் வீணாக வங்காள விரிகுடாவில் கலப்பதாகவும் இந்தத் திட்டத்தின் மூலம் அந்தத் தண்ணீர் தமிழ்நாடு மற்றும் கர்நாடகாவிற்கு பிரித்து வழங்கப்படும் எனவும் தெரிவித்தார்.
கோதாவரி, கிருஷ்ணா, பெண்ணார், காவேரி ஆகிய நதிகளை இணைப்பது குறித்த திட்ட அறிக்கை தயார் நிலையில் உள்ளது எனவும் அதை விரைவில் நாடாளுமன்றத்தில் ஒப்புதல் பெற்று நிதி ஒதுக்கப்படும் எனவும் குறிப்பிட்டார்.