கேரள வெள்ளத்துக்கு உதவியதற்காக ரூ.102 கோடிக்கு பில் ! விளக்கமளித்த அமைச்சர்
மீட்புப்பணியில் ஈடுபட்டதற்காக கேரள அரசுக்கு விமானப்படை ரூ.102 கோடி பில் அனுப்பியதாக மாநிலங்களவையில் மத்திய இணை அமைச்சர் சுபாஷ் பும்ரே தெரிவித்துள்ளார்
2018ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் கேரளாவில் தொடர்ந்து ஒருவாரத்துக்கும் மேலாக கனமழை பெய்தது. இதனால், மாநிலத்தில் பெரும்பாலான மாவட்டங்கள் வெள்ளத்தில் மூழ்கின. 400-க்கும் மேற்பட்டோர் வெள்ளத்தில் பலியானார்கள், லட்சக்கணக்கான மக்கள் வீடுகளை இழந்தனர். இந்த வெள்ள மீட்புப்பணியில் தேசிய பேரிடர் மீட்புப்படையினர், விமானப்படையினர், துணை ராணுவம், தன்னார்வ தொண்டு நிறுவனங்கள் என பல்வேறு தரப்பினரும் ஈடுபட்டனர்.
இந்நிலையில் மீட்புப்பணியில் ஈடுபட்டதற்காக கேரள அரசுக்கு விமானப்படை ரூ.102 கோடி பில் அனுப்பியதாக மாநிலங்களவையில் மத்திய இணை அமைச்சர் சுபாஷ் பும்ரே நேற்று தெரிவித்துள்ளார். பில் தொகை தொடர்பான கேள்விக்கு எழுத்துப்பூர்வமாக பதில் அளித்துள்ள அவர், கேரள வெள்ளத்தில் போது மீட்புப்பணியில் ஈடுபட்ட விமானப்படையின் செலவாக தோராயமாக ரூ.102 கோடிக்கான பில்லை கேரள அரசுக்கு அனுப்பினோம். விமானப்படை மட்டுமில்லை, ராணுவம், கப்பற்படையும் கூட செலவு விவரங்களை சேகரித்து வருகின்றன.
ஆயுதப்படையின் விதியின் படி மீட்புப்பணியின் போது ஏற்படும் செலவீனங்களை திரும்பப்பெற வேண்டும். அதன் அடிப்படையிலேயே இந்த நடைமுறைகள் மேற்கொள்ளப்படுகின்றன. மத்திய அரசு அனுப்பிய பில் தொகையை சரிபார்த்து அதற்கான தொகையை மாநில அரசு திரும்ப அனுப்ப வேண்டும் என்று தெரிவித்தார்.
மேலும் கேரள வெள்ளத்தில் செய்யப்பட்ட மீட்புப்பணிகளுக்கு கேரள முதலமைச்சர் பினராயி விஜயன் உள்ளிட்ட பலரும் பாராட்டு தெரிவித்தனர் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.