"கூடுதலாக ரூ. 400 கோடி தேவை" - பினராயி விஜயன்
கேரளாவில் வெள்ளப்பெருக்கு காரணமாக ஏற்பட்டுள்ள சேதத்துக்கு ஏற்கெனவே கோரியுள்ள 802 கோடி ரூபாயுடன், கூடுதலாக 400 கோடி ரூபாயை மத்திய அரசு வழங்க வேண்டும் என அம்மாநில முதல்வர் பினராயி விஜயன் கோரிக்கை விடுத்துள்ளார்.
கேரளாவில் வெள்ளப்பெருக்கு மற்றும் மண் சரிவால் எட்டு மாவட்டங்கள் பாதிக்கப்பட்டு மக்கள் மிகவும் துயரத்திற்கு உள்ளாகியுள்ளனர். கேரளா அரசு மீட்பு மற்றும் பாதுகாப்பு பணிகளை மேற் கொண்டு வருகிறது. தொடர்ந்து பெய்து வரும் மழையால் மத்திய மற்றும் வடக்கு பகுதிகள் வெள்ளத்தின் பிடியில் தத்தளித்து வருகின்றன. மாநிலம் முழுவதும் நடத்திய முதற்கட்ட ஆய்வில் கேரளாவில் வெள்ளத்தால் 8300 கோடி ரூபாய்க்கும் மேல் சேதம் ஏற்பட்டுள்ளதாக முதலமைச்சர் பினராயி விஜயன் தெரிவித்துள்ள நிலையில் நேற்று இடுக்கி, வயநாடு, மலப்புரம், கோழிக்கோடு உள்ளிட்ட பகுதிகளை ராணுவ ஹெலிகாப்டரில் இருந்தபடியே மத்திய உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் பார்வையிட்டார். அதன்பின் வெள்ளம் பாதித்துள்ள கேரள மாநிலத்திற்கு கூடுதலாக 100 கோடி ரூபாய் நிவாரணம் ஒதுக்கி ராஜ்நாத் சிங் உத்தரவிட்டுள்ளார்.
வெள்ளத்தால் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ள கேரளாவில் உடனடி மீட்பு மற்றும் நிவாரணப் பணிகளை மேற்கொள்ள, ஏற்கெனவே கோரியுள்ள 802 கோடி ரூபாயுடன், கூடுதலாக 400 கோடி ரூபாயை மத்திய அரசு வழங்க வேண்டும் என அம்மாநில முதல்வர் பினராயி விஜயன் கோரிக்கை விடுத்துள்ளார். தேவைப்படும் பட்சத்தில் மத்தியக் குழுவினரை அனுப்பி மாநிலத்தில் ஏற்பட்டுள்ள சேதத்தை மதிப்பீடு செய்து கொள்ளலாம் என்றும் அவர் தெரிவித்துள்ளார். சுமார் 20ஆயிரம் வீடுகள் மற்றும் 10ஆயிரம் கிலோ மீட்டர் நீளத்திலான சாலைகள் முற்றிலும் சேதமடைந்துள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்.

