காஷ்மீருக்கு கூடுதலாக 10 ஆயிரம் ராணுவ வீரர்கள்... பாதுகாப்பை அதிகரிக்க நடவடிக்கை
காஷ்மீருக்கு கூடுதலாக 10 ஆயிரம் ராணுவ வீரர்களை மத்திய அரசு அனுப்பியுள்ளது.
காஷ்மீர் பகுதியில் ஏற்கெனவே சுமார் 60 ஆயிரம் வீரர்கள் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். மேலும் சுமார் 20 ஆயிரம் வீரர்கள் அமர்நாத் யாத்திரை பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். இந்த நிலையில், அங்கு கூடுதலாக 10 ஆயிரம் வீரர்களை மத்திய அரசு அனுப்பி வைத்துள்ளது. இதனால் காஷ்மீரில் மேலும் பாதுகாப்பு அதிகரித்துள்ளது.
மாநிலத்தில் இந்த ஆண்டு இறுதியில் நடைபெற உள்ள பேரவை தேர்தலை எவ்வித பிரச்னையுமின்றி நடத்த இந்த புதிய படையினர் உதவுவர் என சொல்லப்படுகிறது. இதனிடையே கூடுதல் வீரர்களை குவிப்பது காஷ்மீர் மக்களுக்கு அச்சத்தை ஏற்படுத்துவதாக பிடிபி கட்சித் தலைவரும் முன்னாள் முதலமைச்சருமான மெஹபூபா முஃப்தி கூறியுள்ளார்.
கூடுதல் வீரர்கள் குவிப்பால், காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்து அளிக்கும் 370 சட்டப் பிரிவை மத்திய அரசு நீக்கக்கூடும் என்பது உள்ளிட்ட ஐயங்கள் மக்களிடையே நிலவுகிறது. இதனால், ஸ்ரீநகர் உள்ளிட்ட பல பகுதிகளில் மக்கள் அடுத்த சில நாட்களுக்குத் தேவையான உணவு மற்றும் அத்தியாவசியப் பொருட்களை வாங்குவதில் ஆர்வம் காட்டி வருகின்றனர்.