ஹெச்.ஐ.வி- வைரசால் பாதிக்கப்பட்டவர்களை ஒதுக்கி வைப்பதை தவிர்க்கும் சட்டத்தை மத்திய அரசு அமல்படுத்தியுள்ளது.
எச்.ஐ.வி.-யால் பாதிக்கப்பட்டவர்கள் எவ்விதமான பாரபட்சமான செயலுக்கும் ஆட்படுவதைத் தடுக்கவும் முறையான சிகிச்சை பெறவுமான சம உரிமை பெறுவதை உறுதிப்படுத்தும் வகையில் முக்கியமானதொரு சட்டம் கடந்த ஆண்டு கொண்டுவரப்பட்டது. கடந்த ஆண்டு மார்ச் மாதம் 21-ம் தேதியன்று மாநிலங்களவையாலும், ஏப்ரல் 11-ம் தேதியன்று மக்களவையாலும் நிறைவேற்றப்பட்ட மசோதாவுக்கு, ஏப்ரல் 20ம் தேதி குடியரசுத் தலைவர் ஒப்புதல் அளித்தார்.
கல்வி, வேலை வாய்ப்பு, மருத்துவ சிகிச்சை உள்ளிட்டவற்றில் எச்.ஐ.வி.-யால் பாதிக்கப்பட்டவர்களுக்கு சம உரிமை கிடைப்பதற்கு வழிவகுக்கும் இந்த சட்டத்திற்கு குடியரசு தலைவர் ஒப்புதல் அளித்து ஓராண்டிற்கு மேல் ஆன போதும் அமல்படுத்தப்படாமல் இருந்து வந்தது. ஹெச்.ஐ.வி சட்டம் ஏன் அமல்படுத்தப்படாமல் உள்ளது என சமீபத்தில் டெல்லி உயர்நீதிமன்றம் கேள்வி எழுப்பியது. இதையடுத்து ஹெச்.ஐ.வி சட்டத்தை சுகாதாரத்துறை அமைச்சகம் அமல்படுத்தியுள்ளது.
இந்த சட்டப்படி எய்ட்ஸ் போன்ற பால்வினை நோய்களால் பாதிக்கப்பட்டோருக்கு சிகிச்சை தர மறுப்பதும், நிறுவனங்களில் பணியில் இருந்து நீக்குவதும் குற்றம். அதன்படி, பால்வினை நோய் பாதிக்கப்பட்டோருக்கு சிகிச்சை அளிக்க மறுக்கும் மருத்துவருக்கும், அவர்களை உதாசீனப்படுத்துவோருக்கும் 2 ஆண்டு சிறை தண்டனை அல்லது ஒரு லட்சம் ரூபாய் அபராதம் விதிக்க வகை செய்யப்பட்டுள்ளது.