இந்தியாவின் முதல் குளிர்சாதன ரயில் ஆம்புலன்ஸை மத்திய ரயில்வே அறிமுகப்படுத்தியுள்ளது.
இந்த ரயில் ஆம்புலன்ஸ் குறைந்தப்பட்சம் 50 பேருக்கு அடிப்படை சிகிச்சை வழங்குவதற்கான மருத்துவ வசதிகளைக் கொண்டது.
இதுகுறித்து பேசிய மத்திய ரயில்வேயின் செய்தி தொடர்பு அதிகாரி நரேந்திர பாட்டீல், இந்தக் குளிர்சாதன ரயில் ஆம்புலன்ஸ், முன்னாள் பொது மேலாளர் எஸ்.கே.சூட் சிந்தனையால் உருவானது என்று கூறினார். மகாராஷ்ட்ரா மாநிலம் திவா-சவந்த்வாடி இடையே 2014-ம் ஆண்டு ரயில் தடம் புரண்டு 19 பேர் உயிரிழந்ததை அடுத்து இந்த ரயில் ஆம்புலன்ஸ் திட்டம் கொண்டுவரப்பட்டது என்றும் அவர் தெரிவித்தார்.
விபத்து நிவாரணத்திற்காக பல நடவடிக்கைகளை ரயில்வே எடுத்திருந்தாலும், விபத்து நேரங்களில் வெளியில் இருந்து மருத்துவ உதவி வருவது சற்று தாமதமாகலாம் என்பதால் ரயிலின் ஒரு பகுதியாக இருக்கும் இந்த ஆம்புலன்ஸ் அவசர கால சிகிச்சையை அளிக்கும் என்றும் நரேந்திர பாட்டீல் கூறினார்.