கரும்பு நிலுவையை தீர்க்க ரூ.4,500 கோடி : மத்திய அமைச்சரவை ஒப்புதல்
கரும்பு மற்றும் சர்க்கரைத் துறையில் நிதிப்பற்றாக்குறையை சமாளிக்க ரூ.4,500 கோடி நிதித் தொகுப்பை வழங்க மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.
கரும்பு உற்பத்தியை அதிகரிக்க உதவித் தொகை இரண்டு மடங்கு அதிகரிக்கப்பட்டுள்ளது. அத்துடன் 2018-19 சந்தை ஆண்டில் சர்க்கரை ஆலைகள் 50 லட்சம் டன் ஏற்றுமதி செய்ய ஊக்கமளிக்கும் மானியத்துக்கும் மத்திய அரசு ஒப்புதல் அளித்துள்ளது. நாடு முழுவதும் சர்க்கரை விவசாயிகளுக்கு ஆலைகள் தரப்பில் 13 ஆயிரம் கோடி ரூபாய் நிலுவை உள்ள நிலையில், உபரி சர்க்கரையை ஏற்றுமதி செய்வதன் மூலம் நிதி திரட்ட அனுமதிக்கப்பட்டுள்ளது.
5 மாநிலங்களில் பேரவைத் தேர்தல் மற்றும் அடுத்த ஆண்டு மக்களவைத் தேர்தல் வரவுள்ள நிலையில், கரும்பு விவசாயிகளின் பிரச்னைக்கு தீர்வு காண விரும்புவதாக மத்திய அரசு வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. இதற்கு முன்பு கடந்த ஜூன் மாதத்தில் சர்க்கரைத் துறைக்கு ரூ.8,500 கோடி ரூபாய் நிதியுதவியை மத்திய அரசு அளித்தது. இந்நிலையில் ரூ.4,500 கோடி நிதித்தொகுப்பை வழங்க மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.