"தமிழக அரசின் நிவாரணப் பொருள்கள் இலங்கை மக்களுக்கு அனுப்பப்படும்”- மத்திய அமைச்சர் தகவல்

"தமிழக அரசின் நிவாரணப் பொருள்கள் இலங்கை மக்களுக்கு அனுப்பப்படும்”- மத்திய அமைச்சர் தகவல்
"தமிழக அரசின் நிவாரணப் பொருள்கள் இலங்கை மக்களுக்கு அனுப்பப்படும்”- மத்திய அமைச்சர் தகவல்

`தமிழ்நாடு அரசு வழங்கும் நிவாரணப் பொருள்கள் இலங்கையில் வசிக்கும் மக்களுக்கு அனுப்பப்படும்’ என்று மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் தெரிவித்துள்ளார். தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு அவர் எழுதியுள்ள கடிதத்தில் இதனைத் தெரிவித்துள்ளார்.

இலங்கையில் வாழும் மக்கள், அந்நாட்டில் நிலவும் பொருளாதார நெருக்கடியால் அத்தியாவசியப் பொருள்களைக் கூட வாங்க முடியாமல் தவிப்பதால், அவர்களுக்கு மனிதாபிமான அடிப்படையில் உதவ தமிழ்நாடு அரசு முன்வந்துள்ளது. அவர்களுக்கு அத்தியாவசியப் பொருள்களையும் உயிர்காக்கும் மருந்துகளையும் அனுப்ப அனுமதிக்குமாறு தமிழ்நாடு சட்டப்பேரவையில் கடந்த மாதம் 29-ம் தேதி தீர்மானமும் நிறைவேற்றப்பட்டது.

அத்தீர்மான நிறைவேற்றத்தின்போது, முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேரவையில் ஆற்றிய உரையில், “இலங்கையில் உள்ள மக்களுக்கு மனிதாபிமான அடிப்படையில் உதவிட தமிழ்நாடு அரசு தயாராக உள்ளது. இலங்கையில் மண்ணெண்ணெய் வாங்க பல மணி நேரம் காத்திருக்க வேண்டிய நிலை உள்ளது. இலங்கையின் யாழ்ப்பாணம் உள்ளிட்ட பகுதிகளில் ரசாயன உரங்கள் கிடைப்பதில்லை. இலங்கை தமிழர்களுக்கு உதவிட அனுமதிகோரி தமிழ்நாடு அரசு கடிதம் எழுதியும், மத்திய அரசிடம் இருந்து அதற்கு தெளிவான பதில் கிடைக்கவில்லை. இதனால் `பகைவருக்கும் அருள்வாய் நன்னெஞ்சே’ என்கிற நிலையில் இலங்கை தமிழர்கள் வாழ்கிறார்கள். ஆகவே ரூ.80 கோடி மதிப்பில் 40 ஆயிரம் டன் அரிசியை இலங்கை வழங்க தமிழக அரசு தயாராக உள்ளது” என்று உள்ளார். இதுகுறித்த ஆவணங்களும் கடிதமும் மத்திய அரசுக்கு முறையாக அனுப்பப்பட்டது.

இந்நிலையில், முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு மத்திய வெளியுறவுத் துறை அமைச்சர் ஜெய்சங்கர் கடிதம் எழுதியுள்ளார். அதில், இலங்கை மக்களுக்கு உதவுவது தொடர்பான தமிழ்நாடு அரசின் கோரிக்கையை மத்திய அரசு ஏற்றுக் கொண்டதாக குறிப்பிட்டுள்ளார். தமிழ்நாடு அரசு வழங்கும் நிவாரணப் பொருட்கள் தூதரகம் மூலம் இலங்கையிடம் ஒப்படைக்கப்படும் என்றும் ஜெய்சங்கர் உறுதியளித்துள்ளார்.

நிவாரணப் பொருட்களை வழங்குவதற்கும் அதனை விநியோகிக்கும் நடவடிக்கைகளிலும் மத்திய அரசுடன் தமிழ்நாடு அரசின் தலைமைச் செயலாளர் ஒன்றிணைந்து செயல்படலாம் என வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் தெரிவித்துள்ளார்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com