மோடி தலைமையில் அமைச்சரவை கூட்டம் - காஷ்மீர் குறித்து ஆலோசனை?
பிரதமர் மோடி தலைமையிலான மத்திய அமைச்சரவை கூட்டத்தில் காஷ்மீர் விவகாரம் தொடர்பாக முக்கிய ஆலோசனை நடைபெற உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் இன்று மாலை 4 மணிக்கு மத்திய அமைச்சரவைக் கூட்டம் நடைபெற உள்ளது. இதில் காஷ்மீர் தொடர்பான முக்கிய ஆலோசனை நடைபெற உள்ளது என்றும் ஜம்மு-காஷ்மீர் பொருளாதார வளர்ச்சிக்காக பல்வேறு திட்டங்கள் இறுதி செய்யப்பட வாய்ப்பு உள்ளது எனவும் மூத்த அதிகாரிகள் தகவல் தெரிவித்துள்ளனர்.
ஜம்மு- காஷ்மீருக்கு கூடுதலாக 50,000 வேலை வாய்ப்புகளை உருவாக்குவதற்கான முடிவும் இந்த அமைச்சரவைக் கூட்டத்தில் விவாதிக்கப்பட உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. குறிப்பாக, அடுத்த சில மாதங்களில் ஜம்மு-காஷ்மீர் பகுதியில் இருந்து ராணுவம் மற்றும் துணை ராணுவத்திற்கு கூடுதலாக ஆள்சேர்ப்பு செய்வதற்கு ஒப்புதல் கிடைக்க வாய்ப்பு உள்ளதாக தெரிகிறது.
வளர்ச்சிக்கான திட்டங்களை அமல் படுத்துவதன் மூலமும் கூடுதலாக வேலை வாய்ப்புகளை உருவாக்குவதன் மூலமும் ஜம்மு- கஷ்மீர் அமைதி பாதைக்கு செல்ல வழி கிடைக்கும் எனவும் அங்கு உள்ளோருக்கு வளர்ச்சி மற்றும் வேலைவாய்ப்புகள் கிடைத்தால் தீவிரவாதத்திற்கு ஆதரவு தருவது முழுவதும் முடிவுக்கு வந்துவிடும் எனவும் மத்திய அரசு கருதுகிறது.
சட்டப்பிரிவு 370 ரத்து செய்யப்பட்டதை தொடர்ந்து ஜம்மு காஷ்மீரில் பதற்றம் நிலவுகிறது. ஆகஸ்ட் 31-ஆம் தேதி முதல் ஜம்மு- காஷ்மீர் இரண்டு யூனியன் பிரதேசங்கள் ஆக செயல்பட தொடங்கும் எனவும் அதற்கான இறுதி ஒப்பந்தங்கள் பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான அமைச்சரவை கூட்டத்தில் அளிக்கப்படும் எனவும் பிரதமர் அலுவலக வட்டாரங்கள் தகவல் தெரிவித்துள்ளன.
இன்றைய அமைச்சரவை கூட்டத்தில் அந்நிய முதலீடுகளை இன்சூரன்ஸ் உள்ளிட்ட துறைகளில் அதிகரிப்பது குறித்து ஆலோசனை நடத்தப்படும் எனவும் அந்நிய முதலீடுகளை இந்தியாவுக்கு கொண்டு வருவதற்கான விதிமுறைகளும் சுலபமாக்கப் படும் எனவும் அதிகாரிகள் தகவல் தெரிவித்துள்ளனர்.
தற்போதைய பொருளாதார மந்த நிலையை கருதி இத்தகைய முடிவுகள் எடுக்கப்படவுள்ளதாக அதிகாரிகள் விளக்கம் அளித்துள்ளனர்.
இன்றைய அமைச்சரவை கூட்டத்திற்கு பிறகு பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலே இணை அமைச்சர்களும் பங்கேற்கும் முழு அமைச்சரவை கூட்டம் நடைபெறும் என பிரதமர் அலுவலக வட்டாரங்கள் தகவல் தெரிவித்துள்ளன. இக்கூட்டத்தில், முன்னாள் மத்தியமைச்சர் அருண் ஜெட்லி மறைவுக்கு இரங்கல் தீர்மானம் நிறைவேற்றப்படுகிறது.