கேரளாவுக்கு கூடுதலாக ரூ.100 கோடி நிதி - மத்திய உள்துறை அமைச்சர்
கேரளாவிற்கு கூடுதலாக ரூ.100 கோடி நிவாரணம் ஒதுக்கி மத்திய உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் உத்தரவிட்டுள்ளார்.
கேரளாவில் வெள்ளம் பாதித்த இடுக்கி, வயநாடு, மலப்புரம், கோழிக்கோடு உள்ளிட்ட பகுதிகளை ராணுவ ஹெலிகாப்டரில் இருந்தபடியே ராஜ்நாத் சிங் பார்வையிட்டார். அப்போது கேரள முதல்வர் பினராயி விஜயன் உள்ளிட்ட அதிகாரிகள் உடன் இருந்தனர். வெள்ளம் பாதித்த பகுதிகளை ஆய்வு செய்த பின்னர், டுவிட்டரில் பதிவிட்டுள்ள அமைச்சர் ராஜ்நாத் சிங், கேரள மக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர் என தெரிவித்துள்ளார்.
கேரளா பாதிப்பில் இருந்து மீண்டுவர சில நாட்களாகும் எனவும் குறிப்பிட்டுள்ளார். 2018-19 ஆம் ஆண்டின் மாநில பேரிடர் மீட்புக்குழுவுக்கான மத்திய அரசின் நிதியின் முதல் தவணை 80 கோடியே 25 லட்ச ரூபாய் கேரளாவுக்கு கடந்த மாதம் ஒதுக்கப்பட்டது என்றும், இரண்டாம் தவணையாக 80 கோடியே 25 லட்ச ரூபாய் இன்று ஒதுக்கப்பட்டது எனவும் தெரிவித்துள்ளார். இந்நிலையில் கேரளாவின் வெள்ள பாதிப்புகளை கருத்தில் கொண்டு உடனடியாக ரூ.100 கோடி கூடுதலாக நிதி ஒதுக்க உத்தரவிட்டுள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்.

