சர்ச்சைக்குரிய ஓய்வுபெற்ற அதிகாரியிடமே பொறுப்பு ஒப்படைப்பு.. மீண்டும் சூடுபிடித்த கீழடி விவகாரம்!
பழந்தமிழரின் வரலாற்றை விளக்கும் கீழடி குறித்த விரிவான ஆய்வறிக்கையை தொல்லியல் துறை நிபுணர் அமர்நாத் ராமகிருஷ்ணா தயாரித்தார். 2014ஆம் ஆண்டு தொடங்கிய இந்த ஆய்வில், நவீன கருவிகள் உதவியுடன் சோதனைகள் நடத்தப்பட்டு கிடைக்கப் பெற்ற விவரங்களைக் கொண்டு 982 பக்க அறிக்கை உருவாக்கப்பட்டது. இதில் கார்பன் டேட்டிங் சோதனை மூலம் கீழடியில் கிமு 200ஆம் ஆண்டில் மனித வாழ்க்கை இருந்தது தெரியவந்தது. இந்த அறிக்கை 2023ஆம் ஆண்டு தொல்லியல் துறை இயக்குநருக்கு சமர்ப்பிக்கப்பட்டது. ஆனால், அமர்நாத் ராமகிருஷ்ணனின் இந்தக் கீழடி ஆய்வறிக்கையை, இந்திய தொல்லியல் துறை திருப்பி அனுப்பியது. அதில் சில நுட்பமான விபரங்களுடன் திருத்தங்களைச் செய்து, மீண்டும் அறிக்கையை சமர்ப்பிக்குமாறு கோரியது. இது, தமிழகத்தில் கடும் விமர்சனங்களை ஏற்படுத்தியது. இதுதொடர்பாகப் பலரும் கருத்து தெரிவித்த நிலையில், அதற்கு மத்திய அமைச்சர் கஜேந்திர சிங் விளக்கம் அளித்தார். எனினும், தொடர்ந்து தமிழக அரசும், தலைவர்களும் விமர்சித்தனர். இதற்கிடையே, கீழடியை ஆய்வு செய்த தொல்லியல் துறை நிபுணர் அமர்நாத் ராமகிருஷ்ணா மாற்றப்பட்டார். இதனால், இவ்விவகாரம் மேலும் சூடுபிடித்தது.
அமர்நாத் ராமகிருஷ்ணாவுக்குப் பிறகு கீழடியில் நடைபெறும் மூன்றாம் கட்ட அகழ்வாராய்ச்சிக்கான அதிகாரப்பூர்வ அகழாய்வு அறிக்கையை சமர்ப்பிக்குமாறு இந்திய தொல்பொருள் ஆய்வு நிறுவனம் (ASI), ஓய்வுபெற்ற மேற்பார்வை தொல்பொருள் ஆய்வாளர் பி.எஸ்.ஸ்ரீராமனிடம் கேட்டுக் கொண்டது. கீழடி அகழாய்வில் குறிப்பிடத்தக்க எதுவும் கிடைக்கவில்லை எனக்கூறி கண்டனத்திற்கு உள்ளான பி.எஸ்.ஸ்ரீராமனிடம் 3ஆம் கட்ட அகழாய்வு குறித்து அறிக்கை தாக்கல் செய்ய மத்திய அரசு உத்தரவிட்டிருப்பது மீண்டும் விவாதப் பொருளாகி உள்ளது.
2014 - 2016 காலகட்டத்தில் இரண்டு கட்ட அகழாய்வுகளை செய்தார், அமர்நாத் ராமகிருஷ்ணா. அவரைத் தொடர்ந்து, மூன்றாம் கட்ட அகழாய்வை செய்தவர் ஸ்ரீராமன். அவர், அங்கு குறிப்பிடும்படியான தொல்பொருட்கள் கிடைக்கவில்லை எனக் கூறி, அகழாய்வை முடித்தார். பின்னர் அவர், 2021இல் ஓய்வுபெற்றார்.
தமிழ்நாட்டின் சிவகங்கை மாவட்டத்திற்கு அருகிலுள்ள ஒரு முக்கிய தொல்பொருள் தளமான கீழடி, குறைந்தது கிமு 5ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த ஓர் அதிநவீன நகர்ப்புற நாகரிகத்திற்கான சான்றுகளைக் கொண்டுள்ளது. கண்டுபிடிப்புகளில் தமிழ் பிராமி எழுத்துகள், டெரகோட்டா கருவிகள், தொழில்துறை மட்பாண்ட சூளைகள் மற்றும் ஜவுளி உற்பத்தி மற்றும் வர்த்தகத்தைக் குறிக்கும் கலைப்பொருட்கள் ஆகியவை அடங்கும். கீழடியில் கண்டுபிடிக்கப்பட்ட பொருள் கலாச்சாரம், சிந்து சமவெளி நாகரிகத்திற்கும் தென்னிந்தியாவின் ஆரம்பகால நகரமயமாக்கலுக்கும் இடையிலான காலவரிசையை இணைக்கிறது என்று ராமகிருஷ்ணா மற்றும் பிற நிபுணர்கள் வாதிடுகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.