நியூட்ரினோ திட்டத்தால் அணைகளுக்கு பாதிப்பில்லை - மத்திய அரசு
நியூட்ரினோ திட்டத்தால் வைகை மற்றும் முல்லைப்பெரியாறு அணைகளுக்கு எந்தவித பாதிப்பும் ஏற்படாது என மத்திய அரசு தெரிவித்துள்ளது.
நியூட்ரினோ திட்டத்தின் தற்போதைய நிலை குறித்து மக்களவையில் உறுப்பினர் ஒருவர் எழுப்பிய கேள்விக்கு பிரதமர் அலுவலக விவகாரத்துறை அமைச்சர் ஜிதேந்திர சிங் எழுத்துப்பூர்வமாக பதில் அளித்துள்ளார். அதில், நியூட்ரினோ திட்டத்திற்கு சுற்றுச்சூழல் அனுமதி கிடைத்துள்ளதாகவும், வனத்துறை மற்றும் தமிழ்நாடு மாசுக்கட்டுப்பாட்டு வாரியத்தின் அனுமதிக்காக விண்ணப்பிக்கப்பட்டுள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளார். ரயில்வே, சாலைப் போக்குவரத்திற்கான சுரங்கம் தோண்டுவது போன்றே இத்திட்டத்திற்கும் 2 லட்சத்து 30 ஆயிரம் கியூபிக் மீட்டர் அளவு பாறைகள் அகற்றப்பட வேண்டும் என்று கூறியுள்ளார்.
அவை வெடிவைத்து தகர்க்கப்படும் போது சில நூறு மீட்டர் தொலைவிற்கே லேசான அதிர்வு ஏற்படும் என்று சுட்டிக்காட்டினார். ஆகையால் 30 கிலோ மீட்டர் தொலைவில் இருக்கும் வைகை, முல்லைப்பெரியாறு அணைகளுக்கு பாதிப்பு ஏற்படாது என்று திட்டவட்டமாக தெரிவித்தார். திட்டம் செயல்படுத்தப்படும் இடத்திற்கு அருகே இருக்கும் கிராமங்களில் கூட அதிர்வு உணரப்படாது என்றும் குறிப்பிட்டார்.