மேகதாது அணை குறித்து மத்திய அரசு கேள்வி

மேகதாது அணை குறித்து மத்திய அரசு கேள்வி

மேகதாது அணை குறித்து மத்திய அரசு கேள்வி
Published on

மேகதாதுவில் புதிய அணை கட்டும் கர்நாடக அரசின் முடிவுக்கு மத்திய அரசு ஆட்சேபனை தெரிவித்து உள்ளது. காவிரி ஆற்றில் புதிதாக ஒரு அணை கட்டுவது சரியா? என்று கேள்வி எழுப்பியுள்ளது.

காவிரி ஆற்றின் குறுக்கே மேகதாதுவில் ரூ.5,912 கோடியில் புதிய அணை கட்ட கர்நாடக அரசு முடிவு செய்துள்ளது. இதற்கு தமிழக அரசு கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளது. இந்த எதிர்ப்புக்கு மத்தியிலும் கர்நாடக அரசு புதிய அணை கட்டுவதற்கான விரிவான திட்ட அறிக்கை தயாரித்து கடந்த ஜூன் மாதம் 6-ந் தேதி மத்திய அரசின் நீர்வள ஆணையத்திற்கு அனுப்பியது. இந்த திட்டத்திற்கு அனுமதி வழங்குமாறு கர்நாடக அரசு கோரியது. இந்த திட்டத்திற்கு எக்காரணம் கொண்டும் அனுமதி வழங்கக்கூடாது என்று தமிழக அரசு மத்திய அரசை வலியுறுத்தியுள்ளது. இந்த நிலையில் கர்நாடக அரசின் இந்த திட்டத்திற்கு ஆட்சேபனை தெரிவித்து மத்திய நீர்வள ஆணையம் அதை திருப்பி அனுப்பியுள்ளது. மேலும் ஆட்சேபனை தெரிவித்து ஒரு கடிதத்தையும் எழுதியுள்ளது. அதில்,

"காவிரி நீரை பயன்படுத்துவது குறித்து நூறு ஆண்டுகளுக்கும் மேலாக பிரச்சினை உள்ளது. இந்த பிரச்சினையில் காவிரி நடுவர் மன்றம் தீர்ப்பு வழங்கியது. இதில் காவிரி நீர் மாநிலங்களுக்கு இடையே பங்கீடு செய்யப்பட்டுள்ளது. இதை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் இரு மாநிலங்கள் மேல்முறையீடு செய்துள்ளன. இந்த மனுக்கள் மீது விசாரணை நடைபெற்று வருகிறது. விரைவில் இதன் மீது தீர்ப்பு வரவுள்ள நிலையில், காவிரி ஆற்றில் புதிதாக ஒரு அணையை கட்டுவது சரியா?. அதுவும் சம்பந்தப்பட்ட மாநிலங்களுடன் கலந்து ஆலோசிக்காமல், அந்த மாநிலங்களின் நம்பிக்கையை பெறாமல், உரிய அனுமதி பெறாமல் இந்த திட்டத்தை அமல்படுத்துவது சரியா? இவ்வாறு அவசரகதியில் இந்த திட்டத்தை அமல்படுத்துவதால் சட்ட சிக்கல்கள் ஏற்படலாம். இந்த திட்டத்தால் சம்பந்தப்பட்ட மாநிலங்களுக்கு ஏற்படும் சாதக-பாதகங்கள் குறித்து பரிசீலிக்க வேண்டியது அவசியம்.

ஏற்கனவே மழை பற்றாக்குறைவால் ஒவ்வொரு ஆண்டும் காவிரி நீர் பங்கீடு தொடர்பாக பிரச்சினை எழுகிறது. காவிரி நடுவர் மன்ற தீர்ப்பின்படி கீழ் உள்ள மாநிலங்களுக்கு தண்ணீரை திறந்துவிடுவதிலும் பிரச்சினை உள்ளது. இத்தகைய சூழ்நிலையில் புதிய அணை கட்டுவது எந்த அளவுக்கு சரியாக இருக்கும்?" என கடிதத்தில் மத்திய அரசு கேள்வி எழுப்பியுள்ளது.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com