10 நிமிடத்தில் உணவு டெலிவரி என்பதை நிறுத்த மத்திய அரசு உத்தரவு
10 நிமிடத்தில் உணவு டெலிவரி என்பதை நிறுத்த மத்திய அரசு உத்தரவுweb

’10 நிமிடங்களில்’ ஆன்லைன் டெலிவரி என்பது இனி கிடையாது.. மத்திய அரசு அதிரடி உத்தரவு!

டெலிவரி செய்பவர்கள் அவசரமாக டெலிவரி வழங்க ஆபத்தாக பயணம் செய்யும் கட்டாயத்தை தடுக்க நடவடிக்கை எடுக்கும் வகையில் பத்தே நிமிடங்களில் ஆன்லைன் டெலிவரி என்ற முறையை நீக்க மத்திய அரசு பரிந்துரை செய்துள்ளது. உணவு டெலிவரி நிறுவனங்களும் அதை ஏற்றுள்ளன..
Published on
Summary

மத்திய அரசின் உத்தரவின் பேரில் பிலிங்கிட், ஜெப்டோ, ஸ்விக்கி, இன்ஸ்ட்டாமார்ட், ஜோமாடோ போன்ற நிறுவனங்கள் 10 நிமிட டெலிவரிகளை நிறுத்த முடிவு செய்துள்ளன. இது அவசர டெலிவரிகளால் ஏற்படும் விபத்துகளை தவிர்க்கும் முயற்சியாகும். டெலிவரி ஊழியர்கள் ஆபத்தான பயணங்களை குறைக்க வேண்டிய அவசியத்தை மத்திய அரசு வலியுறுத்தியுள்ளது.

கடைசி நிமிடத்தில் ஆன்லைன் டெலிவரி செய்து அவசர அவசரமாக பொருட்களை பெறுபவரா நீங்கள்? அப்படி 10 நிமிடங்களுக்குள் பொருட்கள் கைக்கு வந்து சேரும் என எதிர்பார்க்கும் நபராக நீங்கள் இருந்தால், இந்த செய்தி உங்களுக்கு தான். இனி அதிவேக டெலிவரி வழங்கும் நிறுவனங்கள் "10 நிமிடங்களுக்குள் பொருட்கள் உங்கள் கைக்கு வந்து சேரும்" என உறுதி அளிப்பதை நிறுத்த ஒப்புக்கொண்டுள்ளன.

மத்திய அரசின் கோரிக்கையை ஏற்று இனி "பத்தே நிமிடங்களில்" வாடிக்கையாளரிடம் பொருட்களை கொண்டு சேர்க்கும் அதிவேக டெலிவரிகளை நிறுத்த பிலிங்கிட், ஜெப்டோ, ஸ்விக்கி, இன்ஸ்ட்டாமார்ட் மற்றும் ஜோமாடோ போன்ற நிறுவனங்கள் முடிவு செய்துள்ளன. மத்திய தொழிலாளர் நலத்துறை அமைச்சர் மன்சூக் மண்டாவியாவூடன் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற ஆலோசனையில் இந்த நிறுவனங்களின் பிரதிநிதிகள் இந்த நடவடிக்கையை ஏற்றுக் கொள்வதாக தெரிவித்தனர்.

அவசரமாக பொருட்களை டெலிவரி செய்ய இரண்டு சக்கர வாகனங்களில் விரையும் தொழிலாளர்கள் விபத்துகளில் சிக்குவதை தவிர்க்க இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. சமீபத்தில் அவசரமாக ரயிலில் டெலிவரி செய்த பிறகு ஓடும் ரயிலிலிருந்து இறங்க முயற்சி செய்த டெலிவரி ஊழியர் ஒருவர் கீழே விழுந்தது போன்ற பல்வேறு நடவடிக்கைகளை மத்திய அரசு சுட்டிக்காட்டியதை தொடர்ந்து இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. குறிப்பிட்ட நேரத்துக்குள் அவசரமாக டெலிவரி செய்வதற்காக ஆபத்தான முறையில் பயணம் மேற்கொள்ள வேண்டியுள்ளதாக டெலிவரி பணியில் ஈடுபடும் ஊழியர்கள் தெரிவித்துள்ளனர்.

ரயிலில் இருந்து கீழே விழும் உணவு டெலிவரி ஊழியர்
ரயிலில் இருந்து கீழே விழும் உணவு டெலிவரி ஊழியர்X

புத்தாண்டுக்கு முன்பாக கிட்டத்தட்ட இரண்டு லட்சம் டெலிவரி ஊழியர்கள் நாடு முழுவதும் வேலை நிறுத்த போராட்டம் அறிவித்தது குறிப்பிடத்தக்கது. அவசர டெலிவரிகள் உண்டாக்கும் ஆபத்தான பயணங்கள் காரணமாக பல்வேறு ஆபத்துகளை சந்திப்பதாக இவர்கள் வலியுறுத்தினர். ஆனால் புத்தாண்டு சமயத்தில் நிறைய டெலிவரி பணிகள் இருக்கும் என்கிற காரணத்தால் இவர்கள் முழு வேலை நிறுத்தத்தில் ஈடுபடவில்லை. இந்த விவகாரத்தை கவனத்தில் கொண்ட மத்திய அரசு டெலிவரி நிறுவனங்களின் ஊழியர்களுடன் ஆலோசனை நடத்தியதை தொடர்ந்து "பத்து நிமிட" டெலிவரிகளை முடிவுக்கு கொண்டு வர நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

செய்தியாளர் - கணபதி சுப்பிரமணியம்

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com