நாடாளுமன்ற முடக்கத்தை தவிர்க்க 'சமாதான' ஆயுதம் - மத்திய அரசின் புதிய வியூகம் பலன் தருமா?

நாடாளுமன்ற முடக்கத்தை தவிர்க்க 'சமாதான' ஆயுதம் - மத்திய அரசின் புதிய வியூகம் பலன் தருமா?

நாடாளுமன்ற முடக்கத்தை தவிர்க்க 'சமாதான' ஆயுதம் - மத்திய அரசின் புதிய வியூகம் பலன் தருமா?
Published on

மழைக்கால கூட்டத்தொடர் முடிவடைய இன்னும் ஒன்பது வேலை நாட்கள் மட்டுமே உள்ள நிலையில், மக்களவையும் மாநிலங்களவையும் சுமுகமாக செயல்பட மத்திய அரசு புதிய சமாதான முயற்சியை மேற்கொண்டுள்ளது.

மத்திய பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் திங்கட்கிழமையன்று காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் மல்லிகார்ஜுன கார்கேவை சந்தித்து இதற்கான முயற்சியை தொடங்கியுள்ளார். முதலில் கோவிட் பெருந்தொற்று குறித்த விவாதம் என்றும், அடுத்தபடியாக எதிர்க்கட்சிகள் கோரிக்கைப்படி பெகாசஸ் உளவு மென்பொருள் குறித்த விவாதம் நடத்தலாம் என்றும் கார்கே மூலம் எதிர்க்கட்சிகளுக்கு தெரிவிக்கப்பட்டுள்ளது.

நாடாளுமன்றத் துறை அமைச்சர் பிரகலாத் ஜோஷி மற்றும் பாரதிய ஜனதா கட்சியின் பல மூத்த தலைவர்கள் சமாதான முயற்சியில் பல்வேறு எதிர்க்கட்சித் தலைவர்களை தொடர்பு கொண்டுள்ளனர். இந்த முயற்சி வெற்றி பெற்றால், புதன்கிழமை முதல் நாடாளுமன்றத்தின் இரு அவைகளும் வழக்கம்போல செயல்பட வாய்ப்பு உள்ளது என நாடாளுமன்ற உறுப்பினர்கள் கருதுகிறார்கள்.

மத்திய அரசின் இந்த முயற்சி குறித்து நாளை காலை எதிர்க்கட்சிகளின் முக்கியத் தலைவர்கள் ஆலோசனை நடத்துவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி நாளை எதிர்க்கட்சித் தலைவர்களை ஆலோசனைக்கு அழைத்திருக்கிறார். காலை உணவுடன் தொடங்கி நடக்கவுள்ள இந்த ஆலோசனையில் 14 கட்சிகளின் மக்களவை மற்றும் மாநிலங்களவை குழுத் தலைவர்கள் கலந்து கொள்வார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

திமுக, திரிணாமூல் காங்கிரஸ், இடதுசாரி கட்சிகள், சிவசேனா மற்றும் தேசியவாத காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகளின் தலைவர்கள் இந்த ஆலோசனையில் பங்கேற்பார்கள் என காங்கிரஸ் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் தகவல் அளித்துள்ளனர்.

பெகாசஸ் உளவு மென்பொருள் தொடர்பான விவாதம் நடைபெற வேண்டும் என எதிர்க்கட்சிகள் விரும்பினாலும், அரசின் கோரிக்கையை ஏற்றுக்கொள்ளுமா என்பது சந்தேகமாகவே உள்ளது.

மக்களவையிலும், மாநிலங்களவையிலும் அமளிக்கிடையே பல மசோதாக்களை குரல் வாக்கெடுப்பு மூலம் அரசு நிறைவேற்றி உள்ளது எதிர்க்கட்சிகளுக்கு மேலும் அதிருப்தியை உண்டாக்கியுள்ளது. பொதுக் காப்பீடு சட்டத்தில் திருத்தம் செய்யும் முக்கிய மசோதாவை விவாதங்கள் இன்றி அரசு குரல் வாக்கெடுப்பு மூலம் நிறைவேற்றியுள்ளது. இந்தத் திருத்தத்தின் மூலம் அரசுடமையில் உள்ள நான்கு பொது காப்பீடு நிறுவனங்களில், அரசு 50 சதவீதத்துக்கு மேல் பங்குகளை விற்பனை செய்ய முடியும் என்பதால் இந்த மசோதாவுக்கு கடும் எதிர்ப்பு உள்ளது.

மழைக்கால கூட்டத்தொடரில் இதுவரை ஒரு மசோதா கூட முழுமையாக விவாதிக்கப்படவில்லை என எதிர்க்கட்சித் தலைவர்கள் கண்டனம் தெரிவித்துள்ளனர். பெகாசஸ் உளவு மென்பொருள் தொடர்பான விவாதத்திற்கு மத்திய ஐடி மற்றும் எலக்ட்ரானிக்ஸ் துறை அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் பதில் அளிப்பதால் பலனில்லை என எதிர்க்கட்சிகள் கருதுகின்றன. இந்த விவகாரம் தொடர்பான விவாதத்தில் பிரதமர் நரேந்திர மோடி மற்றும் உள்துறை அமைச்சர் அமித் ஷா பங்கேற்க வேண்டும் என்பது எதிர்க்கட்சித் தலைவர்களின் கருத்து.

அமளிக்கிடையே மசோதாக்கள் குரல் வாக்கெடுப்பு மூலம் நிறைவேற்றப்படுவது, எதிர்க்கட்சிகள் தொடர் முழக்கம் எழுப்பி வருவதால்தான் என அரசு தரப்பில் பதில் குற்றச்சாட்டு முன்வைக்கப்படுகிறது. எதிர்க்கட்சிகள் விவாதத்துக்கு முன்வரவில்லை என்றும், பலமுறை அரசு முன்வைத்த கோரிக்கைகள் எதிர்க்கட்சிகளால் நிராகரிக்கப்பட்டது என்றும் ஆளும் கட்சி தரப்பில் தெரிவிக்கப்படுகிறது.

கோவிட் தொடர்பான முக்கிய விவாதம் ஓர் அவையில் மட்டும் நடந்துள்ள நிலையில், மக்களவையிலும் நடைபெற வேண்டும் என மத்திய அரசு கருதுகிறது. ஒருவேளை எதிர்க்கட்சிகள் தொடர்ந்து அமளியில் ஈடுபட்டால், அரசு தரப்பில் எத்தகைய நிலைப்பாட்டை கையாள வேண்டும் என தற்போது பாரதிய ஜனதா கட்சியின் மூத்த தலைவர்கள் ஆலோசனை நடத்தி வருகிறார்கள்.

செவ்வாய்க்கிழமை காலை பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் பாஜக நாடாளுமன்ற உறுப்பினர்கள் கூட்டம் நடைபெறும் என்றும், அப்போது இதற்கான இறுதி வியூகம் குறித்து அறிவுறுத்தப்படும் எனவும் பாஜக தலைவர்கள் தெரிவித்துள்ளனர்.

ஆவணங்களை கிழித்து எறிவது, பதாகைகளை ஏந்தி முழக்கமிடுவது மற்றும் அமளியில் ஈடுபடுவது ஆகியவற்றைத் தவிர்க்க வேண்டும் என நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லா மற்றும் மாநிலங்களவை தலைவர் வெங்கையா நாயுடு ஆகியோர் எச்சரிக்கை விடுத்துள்ளனர். இந்நிலையில், புதிய சமாதான முயற்சியின் மூலம் இரண்டு வாரமாக நடைபெற்றுள்ள மக்களவை மற்றும் மாநிலங்களவை முடக்கம் இனியாவது முடிவுக்கு வருமா என அரசியல் தலைவர்கள் உன்னிப்பாக கவனித்து வருகின்றனர்.

- கணபதி சுப்பிரமணியம்

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com