யாரெல்லாம் வீட்டில் தனிமைப்படுத்திக் கொள்ளலாம்: மத்திய அரசு புதிய விதிமுறை
கொரோனாவால் பாதித்தப்பட்ட யாரெல்லாம் வீட்டில் தனிமைப்படுத்திக் கொள்ளலாம் என மத்திய அரசு புதிய விதிமுறைகளை வெளியிட்டுள்ளது.
மத்திய சுகாதாரத் துறை வெளியிட்டுள்ள அறிவிப்பின்படி, “அறிகுறி இல்லாதவர்கள் மற்றும் லேசான அறிகுறி உள்ளவர்கள் மட்டும் மருத்துவர் பரிந்துரையின்பேரில் வீட்டில் தனிமைப்படுத்திக் கொள்ளலாம். தனிமைப்படுத்தி கொள்வோர் வீடுகளில் போதிய வசதி இருக்க வேண்டும். மேலும், அவர்கள் பிற குடும்ப உறுப்பினர்களிடமிருந்தும் விலகி தனிமையில் இருக்க வேண்டும். ஹெச்.ஐ.வி. தொற்றுள்ளோர், புற்றுநோயால் பாதிக்கப்பட்டோர், உடலுறுப்பு மாற்று சிகிச்சை செய்தோர் வீட்டு தனிமைக்கு அனுமதிக்கப்பட மாட்டார்கள்.
60 வயதுக்கு மேற்பட்டவர்களும், நீரிழிவு, ரத்த அழுத்தம், சிறுநீரக வியாதி உள்ளவர்கள் மருத்துவர்களின் பரிந்துரைப்படியே வீட்டு தனிமைக்கு அனுமதிக்கப்படுவர். வீட்டு தனிமையில் இருப்பவரின் உதவிக்கு கட்டாயம் ஒரு உதவியாளர் இருக்க வேண்டும். உதவியாளருக்கும், வீட்டில் உள்ள மற்றவர்களுக்கும் மருத்துவர் பரிந்துரைப்படி ஹைட்ராக்சிகுளோரோகுயின் மருந்து தரப்பட வேண்டும்.
இதுதவிர, வீட்டு தனிமையில் இருப்பவர் கட்டாயம் ஆரோக்ய சேது செயலியை பயன்படுத்த வேண்டும். நோய் அறிகுறி குறைந்த, 10 நாட்களுக்குப் பிறகு வீட்டு தனிமையில் இருப்பவர்கள் வெளியே வர அனுமதிக்கப்படுவர். அதேநேரத்தில் அவர்கள் தொடர்ந்து 7 நாட்கள் வீட்டிலேயே இருக்குமாறும் அறிவுரை வழங்கப்பட்டுள்ளது. வீட்டுத் தனிமை முடித்தவர்களுக்கு மீண்டும் கொரோனா பரிசோதனை செய்யத் தேவையில்லை” எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.