நாட்டின் பொருளாதார வளர்ச்சியை முடுக்கிவிட ரூ.40 ஆயிரம் கோடி ரூபாய் மதிப்பிலான சலுகைத் திட்டங்களை செயல்படுத்த மத்திய அரசு திட்டமிட்டுள்ளது.
மத்திய அரசின் பண மதிப்பிழப்பு நடவடிக்கை பெரிதளவில் பயனளிக்கவில்லை என்று பொருளாதார ஆய்வாளர்கள் தெரிவிக்கின்றன. சமீபத்தில் ரிசர்வ் வங்கி தெரிவித்த தகவல்களும், இந்திய பொருளாதாரத்தில் பணமதிப்பிழப்பு பெரிதளவில் முன்னேற்றம் அளிக்கவில்லை என்று குறிப்பிட்டன. இதையடுத்து முன்னாள் மத்திய நிதியமைச்சர் ப.சிதம்பரம் உட்பட நாட்டில் உள்ள பல்வேறு எதிர்கட்சித் தலைவர்களும் பணமதிப்பிழப்பு நடவடிக்கை தோல்வியில் முடிந்த திட்டம் என்று கருத்து தெரிவித்துள்ளனர்.
இந்நிலையில் நாட்டின் பொருளாதார வளர்ச்சியை முடுக்கிவிட மத்திய அரசு திட்டமிட்டுள்ளது. குறிப்பாக சிறுதொழில்கள், ஏற்றுமதி, வங்கிகளுக்கு சலுகைகள் வழங்குவதற்கு முடிவெடுக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. பிரதமர் மோடியின் ஒப்புதலுக்கு பின் இது குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும் எனத் தெரியவந்துள்ளது.