பொதுமக்கள் நாட்டில் உள்ள எந்த ரேஷன் கடையிலும் பொருட்களை வாங்கும் வகையில் ஒரே நாடு ஒரே ரேஷன் கார்டு திட்டத்தை தீவிரமாக நடைமுறைப்படுத்த போவதாக மத்திய அரசு அறிவித்துள்ளது.
உணவு விநியோகத் திட்டம் மற்றும் தேசிய உணவு பாதுகாப்பு திட்டத்தை அமல்படுத்துவது குறித்தும் விவாதிப்பதற்காக மத்திய உணவு மற்றும் பொது விநியோகத்துறை அமைச்சர் ராம்விலாஸ் பஸ்வான் தலைமையில் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. அதில், அனைத்து மாநில உணவுத்துறை செயலாளர்கள் மற்றும் உயர் அதிகாரிகளும் பங்கேற்றனர். அப்போது பேசிய மத்திய அமைச்சர் பஸ்வான், நாடு முழுவதுமுள்ள தேசிய உணவு கழக கிடங்குகளில் போதிய உணவுப் பொருட்கள் இருப்பு வைக்கப்பட்டுள்ளதாகவும், இங்கிருந்து உணவுப் பொருட்களை விரைவில் விநியோகம் செய்யும் வகையில் ஆன்லைன் வசதி ஏற்படுத்தப்படும் எனவும் கூறினார்.
மேலும் மக்கள் நாட்டில் உள்ள எந்த ரேஷன் கடைகளிலும் பொருட்களை வாங்கும் வகையில் ஒரே நாடு ஒரே ரேஷன் கார்டு திட்டம் விரைவில் அறிமுகப்படுத்தப்படும் என்று ராம்விலாஸ் பஸ்வான் தெரிவித்துள்ளார். ஏற்கெனவே ஆந்திரா மற்றும் தெலுங்கானா மாநிலங்களில் இந்தத் திட்டம் சோதனை ரீதியாக அமல்படுத்தப்பட்டுள்ளதாக தெரிவித்த அவர், இதன்மூலம் நுகர்வோர் ஒரு கடையை மட்டும் சார்ந்திருக்காமல் எந்த கடையிலும் பொருட்களை வாங்க முடியும் என்று கூறினார். மேலும் பணி நிமித்தமாக சொந்த மாநிலத்தை விட்டு வேறு மாநிலத்திற்குச் செல்பவர்கள் இத்திட்டத்தின் மூலம் பெரிதும் பயனடைவார்கள் எனவும் அவர் தெரிவித்தார்.