திருட வந்த தம்பதியுடன் கட்டி புரண்டு சண்டையிட்ட நகைக்கடை உரிமையாளர் - வீடியோ
ஐதராபாத்தில் திருட வந்த தம்பதியுடன் நகைக்கடை உரிமையாளர் கட்டிப் புரண்டு சண்டையிட்ட காட்சிகள் வெளியாகியுள்ளது.
இந்தச் சம்பவம் புதன்கிழமை(4.7.18) இரவு நிகழ்ந்துள்ளது. இரவு 9 மணியளவில் கடைக்கு ஒரு தம்பதி வந்துள்ளனர். ஒரு வாடிக்கையாளரை போன்று அவர்கள் நகைகளை பார்வையிட்டனர். பின்னர் சில நகைகளை காண்பிக்குமாறு கேட்டுள்ளனர். உரிமையாளர் ஜெயராம் அவர்களுக்கு 45 நிமிடங்களுக்கு மேல் நகைகளை காண்பித்துள்ளார். அப்படியும் அவர்கள் எந்த நகையையும் தேர்வு செய்யவில்லை. பின்னர், மேலும் சில நகைகளை எடுக்க ஒரு அறைக்கு ஜெயராம் சென்றுள்ளார். அவர்களை பின் தொடர்ந்து அந்தத் தம்பதியும் சென்றுள்ளார்கள்.
அந்த அறைக்குள் நடந்த காட்சிகள் சிசிடிவி காமிராவில் பதிவாகியுள்ளன. அதில், உள்ளே முகமூடி அடிந்து சென்ற அந்தத் தம்பதி ஜெயராமை துப்பாக்கி காட்டி மிரட்டியுள்ளனர். பர்கா அணிந்திருந்த அந்தப் பெண் அவரை சரமாரியாக அடிக்கிறார். இந்தச் சண்டை 10 நிமிடங்களுக்கு மேல் சென்றது. ஆனால், 32 வயதே ஆன ஜெயராம் அவர்களுடன் கடுமையாக சமாளித்து சண்டைபோட்டார். கட்டி உருண்டு சண்டையிட்டனர்.
அவ்வளவு தூரம் ஜெயராம் சண்டையிட்டும் 25 லட்சம் ரூபாய் மதிப்பிலான நகைகளையும், ரூ.4 லட்சம் பணத்தையும் திருடிவிட்டு தப்பிச் சென்றனர். வீடியோ காட்சியில் காணப்படும் துப்பாக்கி ஒரு பொம்பை துப்பாக்கி என்று போலீசார் கூறுகின்றனர். திருட வந்த தம்பதிகள் முகமூடிகள் அணிந்திருந்ததால் அவர்களை அடையாளம் காண முடியவில்லை.
சிசிடிவி பதிவுகள் ஆய்வுக்கு உட்படுத்தப்பட்டு வருவதாகவும், விரைவில் குற்றவாளிகள் கண்டுபிடிக்கப்படுவார்கள் என்று போலீசார் தரப்பில் தெரிவித்தனர். திருட வந்த தம்பதிகளிடம் அடிவாங்கிய நகைக்கடை உரிமையாளருக்கு கை, கண்களில் அடிபட்டது. அவர் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். அதேபோல் திருட வந்தவர்களில் ஒருவருக்கும் மூக்கில் அடிபட்டது சிசிடிவி காட்சியில் தெரிந்தது.