தினசரி பெண்களுக்கு எதிரான குற்றங்களும் உடல் மற்றும் மனரீதியான தாக்குதல்கள் அரங்கேறிக்கொண்டேதான் இருக்கிறது. அந்த பெண்கள் மட்டுமல்லாமல் அவர்கள் குடும்பங்களும் கடுமையாக பாதிக்கப்படுகின்றனர். அதில் குறிப்பாக காதலை மறுக்கும் பெண்களை அவமானப்படுத்தும் விதமாக சமூக ஊடகங்களில் பதிவிடுவது, அவர்கள் முகத்தில் ஆசிட் வீசி தாக்குதல் நடத்துவது போன்ற குற்றங்கள் உலகம் முழுவதுமே நடந்துகொண்டேதான் இருக்கிறது.
அந்த வரிசையில் டெல்லியில் சாலையில் நடந்து சென்றுகொண்டிருந்த பள்ளி மாணவியின் முகத்தில் மர்ம நபர்கள் ஆசிட் வீசிச்சென்ற கொடூரம் அரங்கேறியுள்ளது.
டெல்லியின் தென்மேற்கு பகுதியான வார்கா பகுதியில் இந்த சம்பவம் நடந்துள்ளது. இன்று காலை இரண்டு சிறுமிகள் சாலையின் ஓரத்தில் நடந்து சென்றுகொண்டிருந்தனர். அப்போது முகத்தை மறைத்தபடி பைக்கில் வந்த இருநபர்கள் சாலையில் நடந்து சென்றுகொண்டிருந்த 17 வயது சிறுமி மீது ஆசிட் க்ளாசை வீசிச்சென்றது சிசிடிவி கேமிராவில் பதிவாகியுள்ளது.
ஆசிட் பட்டவுடனே வலி தாங்கமுடியாத சிறுமி முகத்தை கைகளால் மூடிக்கொண்டு அருகிலுள்ள வீட்டிற்கு உதவிக்காக ஓடுவதும் பதிவாகியுள்ளது. சிறுமியைப் பார்த்த அண்டை வீட்டுக்காரர்கள் முகத்திலிருந்த ரசாயனத்தை கழுவ சிறுமிக்கு உதவியுள்ளனர். உடனடியாக மருத்துவமனைக்கு அழைத்துச்செல்லப்பட்ட சிறுமிக்கு தற்போது சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. ஆசிட் பட்டதில் சிறுமியின் முகம் மற்றும் ஒரு கண் பாதிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து சிறுமியின் தந்தை கூறுகையில், “எனக்கு 17 மற்றும் 13 வயதில் இருமகள்கள் உள்ளனர். இருவரும் ஒன்றாகத்தான் இன்று காலை வெளியே சென்றனர். திடீரென அங்கு பைக்கில் வந்த இரு நபர்கள், எனது மூத்த மகளின் முகத்தில் ஆசிட்டை வீசிவிட்டு அங்கிருந்து சென்றுவிட்டனர். அவர்கள் முகத்தை மூடியிருந்தனர்” என்று கூறினார்.
உங்கள் மகளுக்கு ஏதேனும் பாலியல் தொல்லை இருப்பதாக இதற்கு முன்பு கூறியிருக்கிறாரா? என்று கேட்டதற்கு, “இல்லை, அவள் கூறியதில்லை. அப்படி தெரிவித்திருந்தால் நான் கூடவே சென்றிருப்பேன். சகோதரிகள் இருவரும் ஒன்றாக மெட்ரோவில் பள்ளிக்குச் செல்வர்” என்று கூறினார். சிறுமியின் தாயாரிடம் கேட்டபோது, அவரிடமும் சிறுமி தனது தொந்தரவு இருப்பதாக எதுவும் கூறவில்லை என தெரிவித்தார்.
சஃப்தார்ஜங் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள சிறுமி 8% காயங்களுடன் சிகிச்சைபெற்று வருகிறார். அந்த காயங்களின் ஆழம் எவ்வளவு என்பதை 48-72 மணிநேரங்களுக்குள் நடக்கவிருக்கிற அறுவைசிகிச்சைக்கு பிறகே தெரியவரும் என்று கூறியுள்ளார் மருத்துவர் ஷேர்வால். ஆனால் தற்போது சிறுமியின் உயிருக்கு ஆபத்து இல்லை எனவும் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து மூத்த காவல் அதிகாரி ஹர்ஷ் வர்தன் கூறுகையில், குற்றவாளிகளாக அடையாளம் காணப்பட்ட இருவரில் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். மற்றொருவரை தனிப்படைகள் அமைத்து தேடிவருகிறோம் என்று கூறினார். டெல்லி பெண்கள் ஆணைய தலைவி ஸ்வாதி மாலிவால், ஏன் ஆசிட் விற்பனையை தடை செய்யவில்லை? இதுபோன்ற கொடூரமான குற்றங்களை தவிர்த்திருக்கலாமே என்று கேள்வி எழுப்பியுள்ளார். ”நாட்டின் தலைநகரில் பட்டபகலில் இரண்டு ரவுடிகள் பள்ளி மாணவியின் மீது ஆசிட் வீசியுள்ளனர். யாராவது சட்டத்திற்கு பயப்படுகிறார்களா? ஏன் ஆசிட் விற்பனையை தடைசெய்யக்கூடாது? வெட்ககரமானது” என ட்வீட் செய்துள்ளார்.
மேலும் மற்றொரு ட்வீட்டில், காய்கறிகள் போல் ஆசிட்டும் கிடைக்கிறது. அரசு ஏன் இதன் சில்லறை விற்பனையை தடைசெய்யவில்லை? டெல்லி பெண்கள் ஆணையம் பல ஆண்டுகளாக இதனை வலியுறுத்தி வருகிறது. எப்போது அரசுகள் விழிக்கும்?” என்று கேள்வி எழுப்பியுள்ளார்.