சிபிஎஸ்இ 12ம் வகுப்புக்கான மதிப்பெண் முறை எப்போது வெளியீடு?:  சிபிஎஸ்இ செயலாளர் விளக்கம்

சிபிஎஸ்இ 12ம் வகுப்புக்கான மதிப்பெண் முறை எப்போது வெளியீடு?: சிபிஎஸ்இ செயலாளர் விளக்கம்

சிபிஎஸ்இ 12ம் வகுப்புக்கான மதிப்பெண் முறை எப்போது வெளியீடு?: சிபிஎஸ்இ செயலாளர் விளக்கம்

சிபிஎஸ்இ பன்னிரண்டாம் வகுப்பு பொதுத் தேர்வுகள் ரத்து செய்யப்பட்டுள்ள நிலையில், மாணவர்களுக்கான மதிப்பெண் மற்றும் தேர்ச்சி முறைகளைப்பற்றி முடிவு செய்வதற்காக அமைக்கப்பட்ட குழு, இன்னும் ஒரு வாரத்தில் இறுதி முடிவை எடுக்கும் என சொல்லப்பட்டுள்ளது. இது குறித்து இங்கு விரிவாக காணலாம்.

கொரோனா பெரும் தொற்றின் இரண்டாவது அலை காரணமாக சிபிஎஸ்இ பன்னிரண்டாம் வகுப்பு பொதுத் தேர்வுகள் தள்ளி வைக்கப்பட்டு கொண்டே இருந்த சூழலில், கடந்த ஜூலை 1ஆம் தேதி தேர்வுகள் ரத்து செய்யப்படுவதாக பிரதமர் நரேந்திர மோடி அறிவித்தார்.

"மாணவர்களின் உடல்நலனில் எந்த விதமான சமரசமும் செய்து கொள்ள முடியாது" எனக் கூறி பிரதமர் நரேந்திர மோடி இந்த முடிவினை அறிவித்திருந்தார்.

உள்நாட்டில் மேற்படிப்பு பயிலவும், வெளிநாடுகளுக்கு சென்று கல்வி பயிலவும் பன்னிரண்டாம் வகுப்பு மதிப்பெண்கள் மிகவும் அத்தியாவசியமாக இருந்துவருகிறது. அப்படியான சூழலில் மாணவர்களின் தேர்ச்சி மற்றும் மதிப்பெண்கள் எவ்வாறு கணக்கிடப்படும் என்பது குறித்து பிரதமர் மோடி எந்த விதமான அறிவிப்பையும் வெளியிடாமல் இருந்ததற்கு பல்வேறு தரப்பிலிருந்தும் விமர்சனங்கள் எழுந்தது.

இதனையடுத்து மாணவர்களுக்கான தேர்ச்சி முறையை வகுப்பதற்காக, மத்திய கல்வி அமைச்சகத்தின் இணைச் செயலாளர் விபின் குமார் தலைமையில் 12 பேர் அடங்கிய குழு அமைக்கப்பட்டு தொடர் ஆலோசனைகள் நடைபெற்று வருகிறது. இந்தக் குழு எப்பொழுது அறிக்கை சமர்பிக்கும் என கேள்வி எழுப்பப்பட்டிருந்த நிலையில், அதற்கு பதிலளித்துள்ள சிபிஎஸ்இ செயலாளர் "மாணவர்களின் மதிப்பெண் மற்றும் தேர்ச்சி முறை குறித்து இன்னும் இறுதி முடிவு எதுவும் எடுக்கப்படவில்லை. இன்னும் நான்கு நாட்களில் இருந்து ஏழு நாட்களுக்குள் அந்த குழு தங்களது அறிக்கையை சமர்ப்பித்து விடும்" என நம்பிக்கை தெரிவித்துள்ளார்.

"எனினும் அந்தக் குழு வழங்கக் கூடிய முடிவுகளை சிபிஎஸ்சி மறுபரிசீலனை செய்து, மேலும் சிபிஎஸ்சி பள்ளிகளிலிருந்து மாணவர்கள் குறித்த தரவுகளை பெற்று அதன் அடிப்படையில்தான் இறுதி முடிவுகள் வெளியிடப்படும்" என்றும் கூறியுள்ளார் அவர். 'நிச்சயம் இது மிக நீண்ட பணி' என்றும், அதனால் சற்று காலதாமதம் ஆவதற்கான வாய்ப்பு இருப்பதாகவும் அவர் கூறியுள்ளார்.

தேர்ச்சி முறை கணக்கீடு குறித்து இந்த அறிவிப்புடன், ஒருவேளை வெளியிடப்படும் தேர்ச்சி முடிவுகள் மாணவர்களுக்கு திருப்தியாக இல்லை என்றால், சம்பந்தப்பட்ட மாணவர்கள் மட்டும் கொரோனா பரவல் கட்டுக்குள் வந்தபிறகு வழக்கமான தேர்வு முறைகளில் கலந்து கொள்ளலாம் என முடிவெடுக்கப்பட்டு இருப்பதாகவும் அவர் கூறினார். எப்படியாகினும், எந்த முடிவாக இருந்தாலும் அதுபற்றி மாணவர்களிடம் கேட்கப்பட்டும் என்றும், அதிலும் குறிப்பாக தேர்ச்சி முடிவுகளை பொருத்தவரை எந்த மாணவர்களும் கட்டாயப்படுத்த மாட்டார்கள் என அவர் விளக்கமளித்தார்.

மேற்சொன்ன தேர்ச்சி மற்றும் மதிப்பெண் முறைகள் அனைத்தும், நுழைவுத் தேர்வுகளில் பங்கேற்கும் மற்றும் வெளிநாடுகளுக்கு சென்று கல்வி கற்க திட்டமிட்டிருக்கும் மாணவர்களுக்கு இடையூறாக இருக்காது என உறுதியளித்துள்ளார் அவர்.

இது ஒருபுறமிருக்க, 'நாட்டில் உள்ள சிபிஎஸ்இ பன்னிரண்டாம் வகுப்பு மாணவர்களுக்கும் செய்முறை அல்லது மற்ற ஏதேனும் ஒரு தேர்வை நிலுவையில் இருந்தால் அதனை உடனடியாக நடத்த வேண்டும். அந்த முடிவுகளை வரும் ஜூன் 28-ஆம் தேதிக்குள் கட்டாயம் அனுப்பி வைத்துவிட வேண்டும்' என உத்தரவிட்டுள்ளது சிபிஎஸ்சி வாரியம். மேலும் இந்த தேர்வுகள் கட்டாயம் ஆன்லைன் வழியாகத்தான் இருக்க வேண்டும் எனவும் சிபிஎஸ்இ வாரியம் கண்டிப்புடன் கூறியுள்ளது.

12ம் வகுப்பு நடத்தப்பட்ட செய்முறைத் தேர்வுகளில் மாணவர்கள் எடுத்த மதிப்பெண்கள் மற்றும் 9, 10, 11 ஆகிய மூன்று வகுப்புகளிலும் மாணவர்கள் எடுத்த மதிப்பெண்கள் ஆகியவற்றின் அடிப்படையில் இந்த ஆண்டு பன்னிரண்டாம் வகுப்பு சிபிஎஸ்சி மாணவர்களுக்கான மதிப்பெண்கள் முறை மற்றும் தேர்ச்சி முடிவுகள் வெளியிடப்படும் என சொல்லப்படுகிறது. இருப்பினும் இது இன்னும் உறுதி செய்யப்படாத தகவலாகவே உள்ளது.

- நிரஞ்சன் குமார்

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com