டெல்லி துணை முதல்வர் மணீஷ் சிசோடியா கைதாக வாய்ப்பு

டெல்லி துணை முதல்வர் மணீஷ் சிசோடியா கைதாக வாய்ப்பு
டெல்லி துணை முதல்வர் மணீஷ் சிசோடியா கைதாக வாய்ப்பு

டெல்லியில் உற்பத்தி வரி முறையை மாற்றியதால் மதுபான விற்பனையில் அரசுக்கு இழப்பு ஏற்படுத்தியதாக துணை முதல்வர் மணீஷ் சிசோடியா வீடு உட்பட 21 இடங்களில் சி.பி.ஐ. சோதனை நடத்தப்பட்டது. இந்த வழக்கில் மணீஷ் சிசோடியாவை கைது செய்ய சி.பி.ஐ. திட்டமிட்டுள்ளதாகவும் தகவல்கள் வெளிவந்துள்ளது.

அண்மையில் டெல்லி 32 மண்டலங்களாக பிரிக்கப்பட்டு 849 சில்லறை விற்பனை நிலையங்களுக்கு மது விற்பனை செய்ய லைசென்ஸ் வழங்கப்பட்டது. இதில் ஏராளமான முறைகேடுகள் நடைபெற்றதாக புகார் எழுந்தது. குறிப்பாக மது விற்பனை செய்ய லைசென்ஸ் தனியார்களுக்கு வழங்கியபோது பல கோடிக்கு மேல் சலுகை வழங்கப்பட்டதாகவும், விதிகள் மற்றும் செயல்முறைகளை பின்பற்றாமல் ஒரு நிறுவனத்தின் ரூ.30 கோடி மதிப்பிலான டெபாசிட் பணம் திருப்பி அளிக்கப்பட்டது என பாரதிய ஜனதா கட்சியைச் சேர்ந்த மூத்த தலைவர் மீனாட்சி லேகி குற்றம்சாட்டி இருந்தார்.

முறைகேடுகள் நடந்ததாக கூறப்பட்டதால் டெல்லி தலைமை செயலாளர் நரேஷ் குமார் அறிக்கை தாக்கல் செய்ய துணைநிலை ஆளுநர் உத்தரவிட்டிருந்தார். இதன் அடிப்படையில் கடந்த ஜூலை மாதம் தலைமை செயலாளர், ஆளுநருக்கு அறிக்கை தந்தார்.

அந்த அறிக்கையின் ஜி.என்.சி.டி.டி. சட்டம், தொழில் பரிவர்த்தனை விதி, டெல்லி உற்பத்தி வரி ஆகியவை மீறப்பட்டுள்ளதாக குற்றம் சாட்டப்பட்டிருந்தது. இதில் மதுபான உரிமங்கள் வழங்குவதற்கு சலுகை காட்டப்பட்டதாகவும், இதனால் அரசுக்கு ஏராளமான வருவாய் இழப்பு ஏற்பட்டதாகவும் தகவல்கள் வெளியாகின. உற்பத்தி வரித்துறைக்கு பொறுப்பு வகிக்கும் துணை முதல்வர் மணீஷ் சிசோடியா தான் காரணம் என தெரிவிக்கப்பட்டிருந்தது. இந்த அறிக்கையின் அடிப்படையில் சி.பி.ஐ. விசாரணைக்கு துணைநிலை ஆளுநர் சக்சேனாவால் பரிந்துரை செய்யப்பட்டது.

தொடர் நடவடிக்கையில், கலால் துறையில் 11 அதிகாரிகள் ஆளுநர் உத்தரவின் கீழ் சஸ்பெண்ட் செய்யப்பட்டனர். மேலும் டெல்லி அரசின் புதிய கலால் கொள்கைக்கு அனுமதி மறுக்கப்பட்டது. இதனால் டெல்லி அரசின் புதிய கலால் கொள்கை திரும்ப பெறப்படுகிறது என்று துணை முதல்வர் அண்மையில் தெரிவித்திருந்தார். இதனால் டெல்லியில் 468 தனியார் மதுபான கடைகள் ஆகஸ்ட் 1-ம் தேதியுடன் மூடப்பட்டது. மேலும் இனிமேல் அரசு மதுபான கடைகள் மட்டுமே இயங்கும் எனவும் தெரிவிக்கப்பட்டிருந்தது.

இந்நிலையில் சி.பி.ஐ. அதிகாரிகள் ஒருபுறம் வழக்குப்பதிவு செய்த நிலையில் இன்றைய தினம் டெல்லி துணை முதல்வர் மணீஷ் சிசோடியாவுக்கு சொந்தமான வீடு அலுவலகங்கள் மற்றும் 7 மாநிலங்களில் மொத்தமாக 21 இடங்களில் சி.பி.ஐ. அதிகாரிகள் காலை முதல் சோதனை நடத்தினர்.

சோதனைக்கு எதிர்ப்பு தெரிவித்து மணீஷ் சிசோடியாவின் இல்லத்திற்கு முன்பு திரண்ட ஏராளமான ஆம் ஆத்மி கட்சியின் தொண்டர்கள் மற்றும் நிர்வாகிகள் சி.பி.ஐ.க்கு எதிராக கோஷங்களை எழுப்பினர். இதனால் அந்த பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்ட நிலையில் தொடர்ச்சியாக காவல்துறையினர் அவர்களை அதிரடியாக கைது செய்து அழைத்துச்சென்றனர்.

முன்னதாக இந்த சம்பவம் குறித்து செய்தியாளர்களை சந்தித்த முதல்வர் அரவிந்த கெஜ்ரிவால் பேசுகையில், கடவுள் நம்முடன் இருக்கிறார் இது போன்ற சோதனைகளால் கட்சி பயப்படாது. உலகின் சிறந்த கல்வி அமைச்சராக மணீஷ் சிசோடியா இன்று அறிவிக்கப்பட்டார். ஆனால் சி.பி.ஐ. அவரது வீட்டிற்கு சென்று சோதனை நடத்துகின்றனர். மேலும் நியூயார்க் டைம்ஸின் முதல் பக்கத்தில் இடம்பெறுவதும், டெல்லியில் கல்விப் புரட்சியை கொண்டு வருவதும் எளிதானது அல்ல. இது முதல் சோதனை அல்ல. கடந்த 7 ஆண்டுகளில் மணீஷ் சிசோடியா மீது பலமுறை சோதனை நடத்தப்பட்டுள்ளது. ஏற்கெனவே சத்யேந்திர ஜெயின் கைது செய்யப்பட்ட நிலையில் சிசோடியாவும் விரைவில் கைது செய்யப்படுவார் என அரவிந்த் கெஜ்ரிவால் தெரிவித்த நிலையில் இன்று சோதனை நடத்தப்பட்டது.

இது தொடர்பாக விளக்கம் அளித்துள்ள பாரதிய ஜனதா கட்சியைச் சேர்ந்தவரும் மத்திய அமைச்சருமான அனுராக் சிங் தாக்கூர் கூறுகையில், அரவிந்த் கெஜ்ரிவால் மக்களை முட்டாள்களாக நடத்துவதையும், நாட்டு மக்களிடம் பொய் பேசுவதையும் நிறுத்த வேண்டும். டெல்லி அமைச்சர் சத்தியந்தர் ஜெயின் சிறைக்கு சென்ற போது கூட அவர் கட்சியில் இருந்து சஸ்பெண்ட் செய்யப்படவில்லை. கெஜ்ரிவால் மற்றும் மணீஷ் சிசோடியாவின் உண்மை முகம் இன்று பொதுமக்கள் முன் வந்துள்ளது என விமர்சனம் செய்துள்ளார்.

அதே நேரத்தில் பாரதிய ஜனதா கட்சிக்கு சி.பி.ஐ. மற்றும் அமலாக்கத்துறை இரு கைகளாக இருப்பதாகவும், மேற்கு வங்கம் மற்றும் மகாராஷ்டிராவிலும் இதே சோதனையை நடத்தி தலைவர்களை கைது செய்ததாகவும் திரிணாமுல் காங்கிரஸ் கட்சியின் எம்.பி.சவுகதா ராய் தெரிவித்துள்ளார்.இந்த வழக்கில் மணீஷ் சிசோடியாவை கைது செய்ய சி.பி.ஐ. திட்டமிட்டுள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com