லஞ்சம் பெற்றதாக புகார் - சிபிஐ சிறப்பு இயக்குநர் மீதே வழக்குப்பதிவு !
மொயின் குரேஷி வழக்கில் சிபிஐ சிறப்பு இயக்குநர் ராகேஷ் அஸ்தானா, ரூ2 கோடி லஞ்சம் பெற்றதாக சிபிஐ வழக்குப் பதிவு செய்துள்ளது.
டெல்லியை சேர்ந்த இறைச்சி ஏற்றுமதியாளரான மொயின் குரேஷி பெரும் அளவிலான பணத்தை துபாய், லண்டன் மற்றும் பிற வெளிநாடுகளுக்கு பரிமாற்றம் செய்ததை கடந்த 2014-ம் ஆண்டு அமலாக்கத்துறையினர் கண்டுபிடித்தனர். மொயின் குரேஷி தொடர்புடைய வழக்கினை அமலாக்கத்துறை, சிபிஐ போன்ற புலனாய்வு அமைப்புகள் விசாரித்து வருகின்றன.
இந்நிலையில், மொயின் மீதான மோசடியை மறைப்பதற்கு லஞ்சம் பெற்றதாக சிபிஐ சிறப்பு இயக்குநர் ராகேஷ் அஸ்தானா மீது சிபிஐ எஃப்.ஐ.ஆர் பதிவு செய்துள்ளது. இடைத்தரகர் மனோஜ் குமார் அஸ்தானாவுக்கு ரூ2 கோடி லஞ்சம் கொடுத்ததாக நீதிமன்றத்தில் அளித்த வாக்குமூலத்தின் அடிப்படையில் இந்த வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. ராகேஷ் அஸ்தானா, 1984-ஆம் ஆண்டு பிரிவைச் சேர்ந்த குஜராத் ஐபிஎஸ் அதிகாரி ஆவார்.
மத்திய புலனாய்வு அமைப்பான சிபிஐயின் இயக்குநர் அலோக் வர்மாவுக்கும், சிறப்பு இயக்குநர் ராகேஷ் அஸ்தானாவுக்கும் இடையே மோதல் போக்கு நிலவி வந்தது. சிபிஐயின் இயக்குநராக இருக்கும் அலோக் வர்மா, லாலு பிரசாத் யாதவ் தொடர்புடைய ஐஆர்சிடிசி வழக்கு உள்ளிட்ட முக்கிய வழக்குகளின் விசாரணையை தடுக்க முயற்சிப்பதாக சிபிஐயின் சிறப்பு இயக்குநர் ராகேஷ் அஸ்தானா மத்திய ஊழல் தடுப்பு ஆணையருக்கு கடிதம் எழுதி இருந்தார். அப்போது, அந்த கடிதம் பரபரப்பாக பேசப்பட்டது. ஆனால், ராகேஷ் அஸ்தானா மீதே பல்வேறு வழக்குகளில் புகார் இருப்பதாக சிபிஐ தரப்பில் அறிக்கை வெளியிடப்பட்டது. இதுதொடர்பாக இரண்டு மாதங்களுக்கு முன்பு சிபிஐ இயக்குநர் அலோக் வர்மா கேபினேட் செயலாளருக்கு புகார் கடிதம் எழுதியிருந்தார்.
இத்தகைய நிலையில், மொயின் குரேஷி மீதான மோசடி புகாரை மறைக்கும் நோக்கில் அவரிடம் இருந்து ரூ2 கோடியை லஞ்சம் பெற்றதாக ராகேஷ் அஸ்தானா மற்றும் அவருடன் பணியாற்றும் சில அதிகாரிகள் மீது எஃப்.ஐ.ஆர் பதிவு செய்யப்பட்டுள்ளது. அஸ்தானா தலைமையிலான சிறப்பு விசாரணைக் குழு அகஸ்டா வெஸ்ட்லேண்ட் ஊழல், விஜய்மல்லையா வங்கி மோசடி வழக்கு உள்ளிட்ட பல்வேறு முக்கிய வழக்குகளை விசாரணை செய்து வருவது குறிப்பிடத்தக்கது.
சிபிஐ சிறப்பு இயக்குநர் ஒருவர் மீது லஞ்ச வழக்கில் சிபிஐ எஃப்.ஐ.ஆர். பதிவு செய்வது இதுவே முதல்முறை.