ரூ.3,695 கோடி வங்கி மோசடி: ரோட்டோமேக் பென் நிறுவன உரிமையாளர் கைது
வங்கி மோசடி தொடர்பாக ரோட்டோமேக் பென் நிறுவன உரிமையாளர் கைது செய்யப்பட்டுள்ளார்.
ரோடோமேக் பென்ஸ் நிறுவனத்தின் உரிமையாளர் விக்ரம் கோத்தாரி, 5 அரசு வங்கிகளிடமிருந்து சுமார் 3,700 கோடி ரூபாய்க்கு கடன் வாங்கியுள்ளார். அலகாபாத் வங்கி, பாங்க் ஆஃப் இந்தியா, பாங்க் ஆஃப் பரோடா, இந்திய ஓவர்சீஸ் வங்கி மற்றும் யூனியன் பாங்க் ஆஃப் இந்தியா ஆகிய வங்கிகள் கோத்தாரிக்கு கடன் வழங்குவதற்கான வங்கி விதிகளில் சமரசம் செய்துள்ளதாக கூறப்படுகிறது.
இதனையடுத்து, பேங்க் ஆஃப் பரோடா அளித்த புகாரின் அடிப்படையில், விக்ரம் கோத்தாரி வீடு மற்றும் அலுவலகங்களில் சிபிஐ அதிகாரிகள் சோதனை மேற்கொண்டனர். அதேபோல், விக்ரம் கோத்தாரியிடமும் விசாரணை நடத்தப்பட்டது. ரோட்டோமேக் குளோபல் பிரைவேட் லிமிடெட் மீது சிபிஐ குற்றப் பத்திரிகை தாக்கல் செய்துள்ளது. அதன் நிறுவனர் விக்ரம் கோத்தாரி, அவர் மனைவி சாதனா கோத்தாரி, மகன் ராகுல் கோத்தாரி ஆகியோர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.
இந்நிலையில், ரோட்டோமேக் பென் நிறுவன உரிமையாளர் விக்ரம் கோத்தாரி கைது செய்யப்பட்டுள்ளார். 4 நாள் விசாரணைக்கு பிறகு விக்ரம் மற்றும் அவரது மகன் ராகுல் கோத்தாரி இருவரையும் சிபிஐ கைது செய்துள்ளது.
பஞ்சாப் நேஷனல் வங்கியில் வைர வியாபாரி நிரவ் மோடி 11,500 கோடி ரூபாய் வரை மோசடி செய்தது தொடர்பான செய்திகள் ஓய்வதற்குள் மற்றொரு வங்கி மோசடியில் அதன் உரிமையாளர் கைது செய்யப்பட்டுள்ளது மக்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.