வங்கி லாக்கர்களிலும் சிபிஐ சோதனை! “எதுவும் கிடைக்காது” என மணீஷ் சிசோடியா கிண்டல்!

வங்கி லாக்கர்களிலும் சிபிஐ சோதனை! “எதுவும் கிடைக்காது” என மணீஷ் சிசோடியா கிண்டல்!
வங்கி லாக்கர்களிலும் சிபிஐ சோதனை! “எதுவும் கிடைக்காது” என மணீஷ் சிசோடியா கிண்டல்!

டெல்லி துணை முதலமைச்சரும், ஆம் ஆத்மி கட்சியின் மூத்த தலைவருமான மணீஷ் சிசோடியாவின் வங்கி லாக்கரில் சி.பி.ஐ. அதிகாரிகள் சோதனை நடத்தி வருகிறார்கள்.

தலைநகர் டெல்லியில் ஆட்சி செய்து வரும் முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் தலைமையிலான அரசு மதுபான கடைகளுக்கு உரிமம் வழங்கியதில் முறைகேடு நடைபெற்றதாக கூறி டெல்லியின் துணை முதல்வரும், ஆம் ஆத்மி கட்சியின் மூத்த தலைவருமான மணீஷ் சிசோடியா உள்ளிட்ட பலர் மீது சி.பி.ஐ. வழக்குப்பதிவு செய்து விசாரணையை வேகப்படுத்தி இருக்கிறது. மேலும் இந்த விவகாரம் தொடர்பாக அமலாக்கத்துறையும் வழக்குப்பதிவு செய்து விசாரணையை தொடங்கி இருக்கிறது.

ஏற்கனவே இதுதொடர்பாக துணை முதல்வர் மணீஷ் சிசோடியாவுக்கு சொந்தமான வீடு உள்ளிட்ட 31 இடங்களில் கடந்த 19-ஆம் தேதி சோதனை நடத்தப்பட்டது. இதன் தொடர்ச்சியாக டெல்லி புறநகர் பகுதியான காஜியாபாத்தில் உள்ள பஞ்சாப் தேசிய வங்கி கிளையில் மணீஷ் சிசோடியா லாக்கரில் சி.பி.ஐ. அதிகாரிகள் இன்று காலை 11 மணியளவில் சோதனை நடத்தினர்.

இந்த சோதனையின் போது மணீஷ் சிசோடியா மற்றும் அவரது மனைவி ஆகியோரும் வங்கியில் இருந்தனர். நான்கு சி.பி.ஐ. அதிகாரிகள் கொண்ட குழு வங்கி லாக்கரை திறந்து ஆய்வு மேற்கொண்டனர். இதன் காரணமாக சோதனை நடைபெற்று கொண்டிருந்த போது வங்கியின் முன்பு ஏராளமான பொதுமக்கள் மற்றும் ஆம் ஆத்மி கட்சியின் தொண்டர்கள் ஒன்று கூடி முழக்கங்களை எழுப்பினர். செய்தியாளர்களும் அதிக அளவில் கூடியதால் அந்த பகுதி முழுவதுமே பெரும் பரபரப்பாக காணப்பட்டது.

முன்னதாக இந்த சோதனை குறித்து தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் கருத்து தெரிவித்திருந்த சிசோடியா எனது வீட்டில் நடத்தப்பட்ட சோதனை போல வங்கி லாக்கரில் சோதனையிலும் எதுவும் கிடைக்காது. சி.பி.ஐ.அதிகாரிகள் சோதனையை வரவேற்பதாகவும், விசாரணைக்கு முழுமையான ஒத்துழைப்பு கொடுப்பதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

சி.பி.ஐ. அதிகாரிகளின் சோதனைக்கு பிறகு செய்தியாளர்களை சந்தித்த டெல்லி துணை முதல்வர் மணிஷ் சிசோடியா பேசுகையில், “சி.பி.ஐ. அதிகாரிகளின் சோதனையில் எனது வங்கி லாக்கரில் எதுவும் கிடைக்கவில்லை. விசாரணைக்கும் முழுமையான ஒத்துழைப்பு வழங்கப்பட்டுள்ளது. உண்மை தற்போது வென்றுவிட்டது. ஆனால் பிரதமர் நரேந்திர மோடி எப்படியாவது என்னை சிறையில் அடைக்கும் நோக்கத்தில் இருக்கிறார்.” என்று தெரிவித்தார்.

அதே நேரத்தில் மணீஷ் சிசோடியா உடனடியாக பதவி விலக வேண்டும் என டெல்லி சட்டமன்றத்தில் பாரதிய ஜனதா கட்சியைச் சேர்ந்த சட்டமன்ற உறுப்பினர்கள் இன்று கைகளில் பதாகைகளை ஏந்தியபடி தொடர் அமளியில் ஈடுபட்டனர். டெல்லி சட்டமன்றத்தில் ஆளும் கட்சி மற்றும் எதிர்க்கட்சி எம்.எல்.ஏ.க்களின் கடுமையான அமளி காரணமாக இன்று நடைபெறுவதாக இருந்த நம்பிக்கை இல்லா தீர்மானத்தின் மீதான வாக்கெடுப்பு நாளை ஒத்திவைக்கப்பட்டது

-டெல்லியில் இருந்து செய்தியாளர் விக்னேஷ்முத்து

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com