காவிரி மேலாண்மை ஆணையத்தை அமைத்தது மத்திய அரசு

காவிரி மேலாண்மை ஆணையத்தை அமைத்தது மத்திய அரசு
காவிரி மேலாண்மை ஆணையத்தை அமைத்தது மத்திய அரசு

தலா 9 உறுப்பினர்களைக் கொண்ட காவிரி மேலாண்மை ஆணையம் மற்றும் காவிரி நீர் ஒழுங்காற்றுக் குழுவை அமைத்து மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது. காவிரி மேலாண்மை ஆணையத்தை பொறுத்தவரை, கர்நாடகாவை தவிர்த்து, மத்திய மற்றும் 3 மாநில உறுப்பினர்களின் பெயர்கள் அறிவிக்கப்பட்டுள்ளது. மத்திய நீர்வளத்துறை தலைவர் மசூத் ஹுசைன் அந்த ஆணையத்தின் தலைவராக நியமிக்கப்பட்டுள்ளார்.

காவிரி மேலாண்மை ஆணைய உறுப்பினர்களாக மத்திய அரசு அதிகாரிகளான மத்திய நீர்வள ஆணைய முதன்மை பொறியாளர் நவீன்குமார், மத்திய நீர்வளத் துறை இணைச் செயலாளர், மத்திய வேளாண்துறை விவசாயிகள் நலன் இணைச் செயலாளர், விவசாயிகள் நலன் ஆணையர் ஆகியோர் முழுநேர உறுப்பினர்கள். மத்திய அரசின் மேலும் ஒரு இணைச் செயலாளர் பகுதி நேர உறுப்பினராக நியமனம் செய்யப்பட்டிருக்கிறார்.

கர்நாடகா மாநில பிரதிநிதியாக அந்த மாநில நீர்வளத்துறை நிர்வாக செயலாளர் நியமனம் செய்யப்பட்டிருக்கிறார். கேரளா சார்பில் அந்த மாநில நீர்வளத்துறை செயலாளர் டிங்கு பிஸ்வால், புதுச்சேரி பொதுப்பணி வளர்ச்சி ஆணையர் அன்பரசு, தமிழ்நாடு பொதுப்பணித்துறை முதன்மை செயலாளர் எஸ்.கே.பிரபாகர் ஆகியோர் நியமனம் செய்யப்பட்டிருக்கிறார்கள்.

 ஆணையத்தின் தலைவரான மசூத் உசேன் டெல்லி ஐஐடியில் நீர் வளம் தொடர்பான எம்டெக் முதுகலை பட்டம் பெற்றவர். நீர் வளத் துறையில் 31 ஆண்டுகளுக்கு மேல் அனுபவம் கொண்டவர். நீர்வளம் கணக்கிடுதல், திட்டமிடுதல், வடிவமைத்து செயல்படுத்துதல், பாதுகாப்பை உறுதிபடுத்துதல், நிதி மேலாண்மை உள்ளிட்டவற்றில் அனுபவம் உள்ளவர் மசூத் உசேன்.

அதேபோல், காவிரி ஒழுங்காற்றுக் குழுவின் தலைவராக மத்திய நீர்வள ஆணையத்தின் தலைமை பொறியாளர் நவீன்குமார் நியமிக்கப்பட்டுள்ளார். இதில், தமிழகம் சார்பில் தலைமை பொறியாளர் செந்தில் குமார் உறுப்பினராக நியமிக்கப்பட்டுள்ளார். இதிலும், கர்நாடக அரசு சார்பில் உறுப்பினர் நியமிக்கப்படவில்லை. காவிரி ஒழுங்காற்றுக் குழுவின் தலைமையிடமாக பெங்களூரு செயல்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com