காவிரி செயல் திட்டம்: இரண்டு வார காலம் அவகாசம் கேட்டது மத்திய அரசு
காவிரி வரைவு செயல் திட்ட அறிக்கையை தாக்கல் செய்ய மேலும் இரண்டு வார கால அவகாசம் கேட்டு உச்ச நீதிமன்றத்தில் இன்று மத்திய மனு தாக்கல் செய்துள்ளது.
காவிரி விவகாரத்தில் இறுதி தீர்ப்பு அளித்த உச்சநீதிமன்றம் மார்ச் மாதம் 29ஆம் தேதிக்குள் காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கவேண்டும் என உத்தரவிட்டிருந்தது. ஆனால் காவிரி மேலாண்மை வாரியம் அமைப்பதற்கு கர்நாடகா அரசு கடும் எதிர்ப்பு தெரிவித்திருந்தது. உச்சநீதிமன்றத் தீர்ப்பில் காவிரி மேலாண்மை வாரியம் என்ற வார்த்தை இடம்பெறவில்லை என கர்நாடகா கூறியது. காவிரி மேலாண்மை வாரியம் அமைவது குறித்து மத்திய அமைச்சர்களும் மாறுபட்ட கருத்துகளை தெரிவித்தனர். இந்த நிலையில் கர்நாடக மாநில சட்டப்பேரவை தேர்தலுக்கான தேதிகளை தேர்தல் ஆணையம் அறிவித்தது. காவிரி மேலாண்மை வாரியம் அமைப்பதற்கான காலக்கெடு முடிவடைந்தவுடன் தமிழக அரசின் சார்பில் நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடர்ந்தது. இந்த மனுவை விசாரணைக்கு ஏற்றுக்கொண்ட உச்சநீதிமன்றம் தமிழகத்திற்கு தண்ணீர் கிடைப்பது உறுதி செய்யப்படும் என தெரிவித்தது.
இதற்கிடையில் மத்திய அரசு விளக்கம் கோரி ஒரு மனுவை தாக்கல் செய்தது. கர்நாடகாவில் தேர்தல் நடைபெறவுள்ள நிலையில் காவிரி மேலாண்மை வாரியம் அமைத்தால் சட்டம் ஒழுங்கு பிரச்னை ஏற்பட வாய்ப்பு இருப்பதாக அதில் தெரிவிக்கப்பட்டிருந்தது. இறுதித் தீர்ப்பில் இடம்பெற்றுள்ள ஸ்கீம் என்பதன்படி காவிரி மேலாண்மை வாரியமே அமைக்கப்படவேண்டுமா அல்லது நிர்வாக, தொழில்நுட்ப குழுவாக அமைக்கமுடியுமா என்று மத்திய அரசு கேட்டிருந்தது. இந்த மனுவை விசாரணைக்கு எடுத்துக்கொள்ள கூடாது என தமிழக அரசு வாதிட்டது. எனினும் மத்திய அரசின் மனுவை ஏற்றுக்கொண்ட உச்சநீதிமன்றம். அப்போது காவிரி வரைவு செயல் திட்டம் தர உத்தரவிட்ட நீதிபதிகள், தற்போதைய நிலையில் ஸ்கீம் என்ற வார்த்தைக்கு தற்போது எதுவும் கூற முடியாது என்று தெரிவித்தனர். ஒவ்வொரு நேரத்திலும் நதிநீர் பிரச்னையில் நீதிமன்றம் தலையிட முடியாது என்று கூறிய நீதிபதிகள், காவிரி மேலாண்மை வாரியம் என தீர்ப்பில் குறிப்பிடப்படவில்லை என்று தெரிவித்தனர். இதையடுத்து, வழக்கின் அடுத்தக் கட்ட விசாரணையை மே 3ஆம் தேதிக்கு ஒத்திவைத்தனர். இந்நிலையில் மேலும் இரண்டு வாரக்காலம் அவகாசம் கேட்டு மத்திய அரசு இன்று உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளது.