காவிரி வரைவுத் திட்டம் : டாப் 10 அம்சங்கள்

காவிரி வரைவுத் திட்டம் : டாப் 10 அம்சங்கள்
காவிரி வரைவுத் திட்டம் : டாப் 10 அம்சங்கள்

காவிரி விவகாரம் தொடர்பாக திருத்தப்பட்ட வரைவு செயல் திட்டத்தை, உச்சநீதிமன்றத்தில் மத்திய அரசு தாக்கல் செய்துள்ளது. 

காவிரி நதிநீர் பங்கீட்டிற்கான வரைவு செயல்திட்டத்தை கடந்த மே 14ஆம் தேதி உச்சநீதிமன்றத்தில் மத்திய அரசு தாக்கல் செய்தது. அதன்படி காவிரி நதிநீரை பங்கீடு செய்ய 9 பேர் கொண்ட குழு அமைக்கப்படும் என மத்திய அரசு தெரிவித்திருந்தது. இந்த குழுவின் தலைமையகம் பெங்களூருவில் செயல்படும் என்றும் அதில் கூறப்பட்டு இருந்தது. இந்த விவகாரத்தில் மத்திய அரசின் முடிவே இறுதி என்றும் கூறப்பட்டது. இந்த வரைவுத்திட்டத்தின் நகல்கள் தமிழ்நாடு, கர்நாடகா, கேரளா மற்றும் புதுச்சேரி ஆகிய நான்கு மாநிலங்களுக்கும் வழங்கப்பட்டது.

கேரளா தரப்பில் நீர் பங்கீட்டின் அதிகாரங்கள் முழுவதும் மத்திய அரசிடம் இல்லாமல், நதிநீர் பங்கீட்டு குழுவிற்கே வழங்க வேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டது. தமிழக அரசு, குழுவிற்கு காவிரி மேலாண்மை வாரியம் என பெயர் சூட்ட வேண்டும் என்றும், அதன் தலைமையகம் டெல்லியில் அமைக்கப்பட வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்தது. இவற்றை மத்திய அரசும், உச்சநீதிமன்றமும் ஏற்றுக்கொண்டன. அதன்படி இன்று திருத்தம் செய்யப்பட்ட காவிரி நதிநீர் பங்கீட்டின் வரைவு திட்டம் மத்திய அரசால் உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டு, அது ஏற்றுக்கொள்ளப்பட்டது.

பத்து சிறப்பம்சங்கள் :

  1. வரைவுத் திட்டம் உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பில் அடிப்படையில் வடிவமைப்பு.
  2. வரைவுத் திட்டத்தின் நகல்கள் நான்கு மாநில அரசுகளுக்கும் வழங்கப்பட்டன.
  3. பருவகாலத்திற்கு முன்பே வரைவுத் திட்டத்தை செயல்படுத்த வேண்டும்.
  4. நதிநீர் பங்கீட்டு குழுவிற்கு காவிரி மேலாண்மை ஆணையம் என பெயர் சூட்டப்பட்டுள்ளது.
  5. ஆணையத்திற்கே அனைத்து அதிகாரங்களும் வழங்கப்பட்டுள்ளது.
  6. மத்திய அரசுக்கு எதிரான, நீதிமன்ற அவமதிப்பு குற்றச்சாட்டு நிராகரிப்பு.
  7. வரைவு திட்டத்தை உடனடியாக அரசிதழில் வெளியிட உச்சநீதிமன்றம் உத்தரவு.
  8. ஆணையத்தின் தலைமையகம் டெல்லியில் அமைக்கப்படும்.
  9. காவிரியில் அணை கட்ட கர்நாடகத்திற்கோ, தமிழகத்திற்கோ உரிமை இல்லை. 
  10. மாதந்தோறும் அணையின் நீர் இருப்பு விவரத்தை ஆணையத்திடம் கர்நாடக அரசு சமர்பிக்க வேண்டும்.

மேலே குறிப்பிடப்பட்டுள்ள விவரங்களின் படி வரைவுத்திட்டம் செயல்படுத்தபடவுள்ளது. மேலும் காவிரி விவகாரம் தொடர்பான அனைத்து வழக்குகளையும் உச்சநீதிமன்றம் முடித்துவைத்துள்ளது.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com